திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியையடுத்த கொடுவாய் அருகே, காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து ஊதியூர் காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியையடுத்த கொடுவாய் அருகே காக்கா பள்ளம் என்ற இடத்தில் தாராபுரத்தில் இருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற காரும், திருப்பூரில் இருந்து தாராபுரத்தை நோக்கி சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் இரண்டு பேரும், மருத்துவமனை சென்ற ஒருவரும் உயிரிழந்திருக்கிறார். மேலும் இரண்டு பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் உள்ளனர்.
இந்த விபத்தில் கார்தான் கட்டுபாட்டை இழந்து சாலையின் மையத்தில் உள்ள தடுப்பை மீறி எதிர் திசையில் பாய்ந்து சென்று எதிரே வந்த பேருந்துகளின் மீது மோதியது தெரியவந்துள்ளது. மோதிய வேகத்தில் பேருந்து தலைக் குப்புற கவிழ்ந்தது. இதில் அந்த கார் மீண்டும் அது வந்த திசையிலேயே சென்று சுக்குநூறாக நொறுங்கிய காட்சிகள் கிடைத்திருக்கிறது. மோதிய வேகத்தில், காரில் வந்தவர்கள் காரை விட்டு வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் இருவர் பலியானதாகவும், தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கே ஒருவர் பலியானதாகவும் விபத்தை பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் திருப்பூர் தனியார் மருத்துவமனையில் இருவர் கவலைக்கிடமாக உள்ளனர். தடுப்பை மீறி கார் பேருந்து மோதும்போது பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்த முற்பட்டிருக்கிறார். இதில் பேருந்தின் பின்னாடி வந்த ஆம்னி கார், இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த விபத்தினால் காக்கா பள்ளம் பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் சம்பவ இடத்தில் காங்கேயம் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையில் காங்கேயம் காவல் ஆய்வாளர் காமராஜ் மற்றும் ஊதியூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருப்பூர் ஆர்டிஓ ஆனந்த் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். விபத்தில் உயிரிழந்தவர்கள் சூலூர் பகுதியை சேர்ந்த வீரக்குமார், முருகேசன், சுஜித் என்பதும் கவலைக்கிடமாக உள்ளவர்கள் மகேஷ் குமார், கிஷோர் குமார் என்பதும் தெரிய வருகின்றது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM