வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்-தைவான் ஜலசந்தி மற்றும் பிராந்தியத்தின் அமைதி, ஸ்திரத்தன்மையை காக்கும் நோக்கத்திற்கு முரணாகவும், பொறுப்பற்ற விதத்திலும் சீனா செயல்பட்டு வருவதை கண்டிப்பதாக அமெரிக்கா எச்சரித்து உள்ளது.
கைப்பற்றுவோம்
தென்கிழக்கு ஆசிய நாடான தைவானை, சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தைவானை தன்னுடன் அதிகாரப்பூர்வமாக இணைப்பதற்கான நடவடிக்கைகளை அந்நாடு மேற்கொண்டுள்ளது. தேவைப்பட்டால் தைவானை கைப்பற்றுவோம் என்றும் சீனா தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது
.இந்நிலையில், அமெரிக்க பார்லி.,யின் பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி சமீபத்தில் தைவான் வந்தார். அவரது வருகையை சீனா கடுமையாக எதிர்த்தது. அவர் வந்து திரும்பிய மறுநாள், தென் சீன கடல் பகுதியில், தைவான் ஜலசந்தியில் போர் பயிற்சியை சீனா துவக்கியது. அந்நாட்டு கடலின் வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் 11 ஏவுகணைகளை ஏவியது.இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி கூறியதாவது:சீனாவின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம். தைவான் ஜலசந்தி மற்றும் பிராந்தியத்தின் அமைதி, ஸ்திரத் தன்மையை காக்கும் நோக்கத்திற்கு முரணாகவும், பொறுப்பற்ற விதத்திலும் சீனா செயல்பட்டு வருகிறது.
தைவானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, நான்சி பெலோசியின் வருகையை சீனா காரணமாக பயன்படுத்துகிறது. இந்த விவகாரத்தில் சீனா அதிகப்படியாக எதிர்வினையாற்றுகிறது.இப்படிப்பட்ட நடவடிக்கையில் சீனா இறங்கும் என்பதை எதிர்பார்த்தோம். வரும் நாட்களில் இவை மேலும் தொடரும் என்றும் எதிர்பார்க்கிறோம். சீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா தயாராக உள்ளது. எவ்வித நெருக்கடிகளையும் நாங்கள் தேடிச் செல்லமாட்டோம்; விரும்பவும் மாட்டோம். அதே நேரம், பல ஆண்டுகளாக தைவானை நாங்கள் ஆதரித்து வருகிறோம். சுதந்திரமான இந்தோ – பசிபிக்கை பாதுகாத்து வருகிறோம்.
பொருளாதார தடை
எனவே, மேற்கு பசிபிக் கடல் பகுதியில், சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு கடல் மற்றும் வான்வெளியில் எங்கள் நடவடிக்கை தொடரும். அதை யாரும் தடுக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே ‘நான்சி பெலோசி சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் அத்துமீறி தலையிடுகிறார்’ என குற்றஞ்சாட்டி, அவர் மீது சீன வெளியுறவு அமைச்சகம் பொருளாதார தடைகளை விதித்துஉள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement