இந்திய அளவில் முதன்முறையாக அரசு மருத்துவமனையில் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து மதுரை அரசு மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எலும்பு வங்கி தொடங்கப்பட்டது. இந்த எலும்பு வங்கி மூலம் மனித எலும்புகள் குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்டு, கிருமி நீக்கம் செய்யப்படுகிறது. அவ்வாறு சேமிக்கப்படும் எலும்பு மற்றும் ஜவ்வுகளை 5 வருடம் வரை எலும்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தலாம். இந்த எலும்பு வங்கியின் மூலம் 7 நோயாளிகள் பயன்பெற்றுள்ளனர்.
அதில் மூவருக்கு நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் முழங்காலில் தசைநார் கிழிதல் தொந்தரவு முற்றிலுமாக குணப்படுத்தப்பட்டுள்ளது. எலும்பு சேராமல் அவதிப்பட்ட மேலும் 3 பேருக்கும், கோணல் முதுகு வியாதி இருந்த ஒரு நோயாளியும் இதன்மூலம் பயனடைந்துள்ளனர். இந்திய அளவில் அரசு மருத்துவமனையில் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வது இதுவே முதல்முறை என மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஒருவரின் உடலில் இருந்து பெறப்படும் சவ்வு பகுதியை 4 பேருக்கு பயன்படுத்த முடியும் என்கிறார் முடநீக்கியல் துறை தலைவர் அறிவாசன்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM