நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஹவாலா பணப் பரிமாற்றம் கண்டுபிடிப்பு – யங் இந்தியா அலுவலகத்தில் அமலாக்கத் துறை தீவிர சோதனை

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் நடந்த சோதனையில் ஹவாலா பணப் பரிமாற்றம் நடந்ததற்கான ஆதாரங்களை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தும் அசோசியேட்டட் ஜர்னல் நிறுவன பங்குகளை, யங் இந்தியா நிறுவனம் வாங்கியதில் நிதி முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக யங் இந்தியா நிறுவனத்தின் பங்கு தாரர்களான காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுலிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பெற்றது.

இந்நிலையில், நேஷனல் ஹெரால்டு அலுவலகம் உட்பட டெல்லியில் அசோசியேட்டட் ஜர்னல் நிறுவனத்தின் சொத்துக்கள் இருக்கும் இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது. இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஹவாலா முறையில் பணப் பரிமாற்றங்கள் நடந்ததற்கான ஆதாரங்களை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. மும்பை மற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்த ஹவாலா ஆபரேட்டர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்.

விசாரணையின் போது, யங் இந்தியன் நிறுவனத்திடம் இருந்து நிதி ஆதாயம் பெறவில்லை எனவும், நிதி தொடர்பான முடிவுகளை மோதிலால் வோரா எடுப்பதாகவும் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கூறியிருந்தனர். ஆனால் தற்போது ஹவாலா பணப் பரி மாற்றத்துக்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், ராகுல் மற்றும் சோனியா காந்தி அளித்த வாக்குமூலங்களை அமலாக்கத் துறை மறு ஆய்வு செய்து வருகிறது. யங்இந்தியன் நிறுவனத்தின் சோதனைகள் முடிந்தபிறகு, அமலாக்கத் துறை மிகப் பெரிய நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது.

டெல்லியில் உள்ள ஹெரால்டு ஹவுஸ் அலுவலகத்தின் தரை தளத்தில், யங் இந்தியன் நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது. இந்நிலையில் இங்குள்ள ஆதாரங்களை பாதுகாக்க, இந்த அறைக்கு அமலாக்கத் துறையினர் நேற்று முன்தினம் தற்காலிகமாக சீல் வைத்திருந்தனர். இதன் தலைமை அதிகாரியாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளார். அவருக்கு அமலாக்கத் துறை நேற்று சம்மன் அனுப்பியது. அவர் நேற்று மதியம் 12.40 மணிக்கு ஆஜரானதும், யங் இந்தியன் அலுவலகத்தை திறந்து நேற்று சோதனை நடத்தப்பட்டது. பின்னர் கார்கேவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ராகுல் காந்தி சவால்

யங் இந்தியா அலுவலகத்தில் சோதனை நடந்ததை அடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்று கூடினர்.

அப்போது, ராகுல் அளித்த பேட்டியில், ‘‘நேஷனல் ஹெரால்டு வழக்கு அச்சுறுத்தும் விவகாரம். மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் அழுத்தம் கொடுத்தால் அமைதியாக போய் விடுவோம் என நரேந்திர மோடியும், அமித்ஷாவும் நினைக்கிறார்கள்.

எங்களை மிரட்ட முடியாது. ஜனநாயகத்துக்கு எதிராக மோடியும், அமித்ஷாவும் என்ன செய்தாலும், நாங்கள் உறுதியுடன் எதிர்த்து நிற்போம். மோடியை கண்டு நாங்கள் பயப்படவில்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். அதுபற்றி எனக்கு கவலையில்லை. நாட்டின் ஜனநாயகம், மத நல்லிணக்கத்தை பாதுகாக்கும் எனது பணியை நான் தொடர்ந்து செய்வேன்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.