பழநி, கொடைக்கானலில் விடிய விடிய கனமழை கொட்டியது. கொடைக்கானல்-அடுக்கம் மலைச்சாலையில் மண் சரிவு, சாலையில் பிளவு ஏற்பட்டதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி, கொடைக்கானலில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை கன மழை கொட்டியது. இதனால் கொடைக்கானலில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் விடுமுறை அளித்தார். பழநியிலும் கனமழை பெய்த போதும் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்காததால் மாணவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். பல இடங்களில் மழை தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்தது.
பழநி-கொடைக்கானல் சாலையில் மரங்கள் விழுந்து போக்கு வரத்து துண்டிக்கப்பட்டது. மலைச் சாலையில் பல இடங்களில் திடீர் நீர்வீழ்ச்சிகள் தோன்றி தண்ணீரைக் கொட்டின.
கொடைக்கானலுக்குச் செல்லவத்தலக்குண்டு, பழநி வழியாக வழக்கமான பொதுப்போக்கு வரத்து நடைபெறுகிறது.
மாற்று வழிப்பாதையான கொடைக்கானல்- அடுக்கம்-பெரியகுளம் சாலையில் பொதுப் போக்குவரத்து இன்னும் தொடங்கவில்லை. இங்குள்ள கிராமப் பகுதியில் வசிப் பவர்கள் இருசக்கர வாகனம், விளைபொருட்களை சரக்கு வாக னங்களில் கொண்டு செல்ல இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர். இச்சாலையில் மழையின் போது அடிக்கடி மண் சரிவு ஏற்படுவது தொடர்கிறது.
தொடர் மழை காரணமாக நேற்று கொடைக்கானலில் இருந்து அடுக்கம் வழியாக பெரியகுளம் செல்லும் மலைச்சாலையில் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அடுத்தடுத்து மண் சரிவு ஏற்பட்டது. குருடிகாடு எனும் இடத்தில் சாலையின் நடுவே பிளவு ஏற்பட்டு சாலை பெயர்ந்து விழுந்தது. இதனால் வாகன போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது.
பாலமலை, சாம்பக்காடு உள் ளிட்ட மலைக் கிராமத்தினர் கிரா மங்களிலேயே முடங்கினர். மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வரு கின்றனர்.