பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கடந்த ஓராண்டில் 5-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பெங்களூரு வந்தார்.
கர்நாடகாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தல் குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை, மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு குறித்து பாஜக மூத்த நிர்வாகிகளிடம் விசாரித்த போது கூறியதாவது:
கர்நாடகாவில் பாஜக நிர்வாகிகளும், இந்து அமைப்புகளை சேர்ந்த செயல் வீரர்களும் தொடர்ந்து கொலை செய்யப்படுவது குறித்து அமைச்சர் அமித் ஷா அதிருப்தியை வெளிப்படுத்தினார். இனி இந்த கொலைகள் நடக்காத வகையில் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜக தொண்டர்கள் கட்சியின் தலைவர்கள் மீதும், அரசின் மீதும் அதிருப்தியில் இருப்பது ஆபத்தானது. இது தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும். எனவே முதல்வர் பசவராஜ் பொம்மை முதல் வேலையாக கட்சித் தொண்டர்களின் கோபத்தை தணிக்க வேண்டும். பாஜக தொண்டர்களை ஒருங்கிணைத்து கட்சிக்கு உழைக்க தயார்படுத்த வேண்டும்.
வட்டார அளவில் உள்ள பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உடனடியாக தீர்க்க வேண்டும். கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் அமித் ஷா அறிவுரை வழங்கினார்.
அமித் ஷா குற்றச்சாட்டு
பெங்களூருவில் இந்திய தொழில் துறை கூட்டமைப்பு சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அமித் ஷா பேசுகை யில், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்லாட்சியை வழங்கி வருகிறது. அவருக்கு பின்னால் இருந்து யாரும் அவரை இயக்கவில்லை. மத்திய அமைச்சர்கள் அனைவரும் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படியே சுதந்திரமாக செயல்படுகின்றனர். ஆனால் 2014-ம் ஆண்டுக்குமுன் பிரதமராக இருந்தவர் (மன்மோகன் சிங்), பிரதமராக செயல்பட அனுமதிக்கப்படவில்லை. “அவங்க” தான் நிழல் பிரதமராக செயல்பட்டார்” என மறைமுகமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விமர்சித்தார்.