இயற்கை உபாதை கழிக்கச் சென்ற மாணவிகளை போனில் வீடியோ எடுத்த இளைஞரைப் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள நன்னை கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. அங்கு ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புகள் வரை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அதில், 200-க்கும் மேற்பட்ட மாணவியர்கள் படித்துவருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடக்கப் பள்ளியாக இருந்ததை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. உயர் நிலைப் பள்ளியில் மாணவியர்களுக்குக் கழிப்பறை வசதி இல்லாததால் தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறைக்குச் சென்று மாணவிகள் இயற்கை உபாதைகள் கழிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
மாணவிகள் சிலர் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற போது, அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அத்துமீறி மறைந்திருந்து, தனது செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். இதனைக் கண்ட மாணவிகள் கத்தியிருக்கிறார்கள். மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டனர்.
மாணவிகளிடம் என்ன நடந்தது எனக் கேட்டு அறிந்து வாலிபரைத் தேடிப்பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அடி தாங்க முடியாத வாலிபர் தப்பியோடித் தலைமறைவானார். பின்னர் காவல்துறையினருக்குப் பொதுமக்கள் தகவல் அளித்த பிறகு அந்த இளைஞரின் புகைப்படத்தைக் காட்டி போலீஸாருக்கு தகவலைச் சொல்லியிருக்கிறார்கள்.
பின்பு போலீஸார் நடத்திய விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் தான் அந்த வாலிபர் என்பது தெரியவந்தது. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த குன்னம் போலீஸார் தலைமறைவான மணிகண்டனைத் தேடி வருகின்றனர்.
மத்திய, மாநில அரசுகள் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு ஏற்படும் அவலங்களைப் போக்கத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் தரப்பில் பேசினோம். “`ஒரு பள்ளி தரம் உயர்த்தப்படுகிறது என்றால் அதற்கான வசதிகள் ஏற்படுத்தித் தரவேண்டும். கழிவறை மாணவ, மாணவிகளுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. அதனை ஏற்படுத்தித் தராதது அரசின் தவறு. அரசுப் பள்ளி வளாகத்திற்குள் மாணவிகள் இயற்கை உபாதைகள் கழிப்பதை இளைஞர் மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுக்கிறார் என்றால் பள்ளியின் தரம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.
எத்தனையே அரசு கட்டங்கள் சும்மாவே கிடக்கிறது. கோடிக்கணக்கில் தேவை இல்லாததுக்கெல்லாம் இந்த செலவு செய்துகொண்டிருக்கிறது. ஆனால், மாணவ, மாணவிகள் பயிலும் பள்ளிகளில் போதிய கழிவறைகள் இல்லாத வேதனை அளிக்கிறது” என்று ஆதங்கப்படுகிறார்கள்.