இடுக்கி
முல்லைப் பெரியாறு அணை நீர் திறப்பு குறித்து கேரள அமைச்சர் தமிழக அரசுக்குக் கடிதம் அனுப்பி உள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை கேரள எல்லைக்குள் இருந்தாலும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்குப் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக உள்ளது. தற்போதைய கன மழை காரணமாக அணையின் நீர் மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் முழுக் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அணையில் இருந்து நீர் திறந்து விட அரசு முடிவு எடுத்துள்ளது. இதையொட்டி இடுக்கி மாவட்ட நிர்வாகத்துக்கு தமிழக அரசு பொதுப்பணித்துறை வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு எழுதிய கடிதத்தில், “கேரளா வழியாக உள்ள முல்லைப் பெரியாறு அணை மதகுகளை திறக்கும் முன்பு முறையான முன் அறிவிப்பு கொடுக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.