மலப்புரம் :கேரளாவில் நடந்த ராமாயண வினாடி – வினா போட்டியில், முஸ்லிம் மாணவர்கள் இருவர் வெற்றி பெற்றுள்ளது, அனைத்து தரப்பினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
மதங்களின் கலாசாரம்
இங்குள்ள மலப்புரம் மாவட்டத்தில் வளஞ்சேரி என்ற இடத்தில், கே.கே.எஸ்.எம்., என்ற இஸ்லாமிய மத போதனைகளை கற்றும் தரும் கலை, அறிவியல் கல்லுாரி செயல்படுகிறது. இந்த கல்லுாரியின் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹிந்து, சீக்கியம் உள்ளிட்ட மதங்களின் கலாசாரம், இலக்கியம் போன்ற பாடங்களும் உள்ளன.
இந்நிலையில், ராமாயண மாத கொண்டாட்டத்தை ஒட்டி, ‘டிசி புக்ஸ்’ என்ற அமைப்பு சார்பில் மலப்புரத்தில் சமீபத்தில் ராமாயண வினாடி – வினா போட்டி நடந்தது.
இதில், மாநிலம் முழுதும் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். இறுதியில் ஐந்து மாணவர்கள் வெற்றி பெற்றனர். இதில் முகமது ஜபீர், முகமது பஷீத் ஆகியோர் கே.கே.எஸ்.எம்., கல்லுாரியைச் சேர்ந்தவர்கள்.
இது குறித்து அவர்கள் இருவரும் கூறியதாவது:எங்கள் கல்லுாரியின் பாடத் திட்டத்தில் ஹிந்து, சீக்கியம், பவுத்தம் உட்பட அனைத்து முக்கிய மதங்களின் இலக்கியம்
பற்றிய பாடங்களும் இடம் பெற்றுள்ளன. நாங்கள் படிப்பது, ‘வபி’ என்ற பாடத் திட்டம். இஸ்லாமிய கல்லுாரிகள் கூட்டமைப்பின் கீழ் செயல்படும், 97 கல்லுாரிகளில் இந்த பாடத் திட்டம் உள்ளது. ராமாயணமும், மகாபாரதமும் இந்திய கலாசாரத்தின் ஒரு அங்கம். எனவே, அனைவரும் இவற்றை படிக்க வேண்டும்.
உத்வேகம்
அனைத்து மதங்களுமே நல்லிணக்கத்தைத் தான் போதிக்கின்றன; வெறுப்புணர்வை போதிக்கவில்லை. ராமாயணத்தின் நாயகனான ராமர், நீதியின் உருவகமாக செயல்பட்டவர்; சகிப்புத்தன்மை மற்றும் அமைதியை போதித்தவர். தன் தந்தை தசரதனுக்கு அளித்த வாக்குறுதிக்காக, தன் ஆட்சியையே தியாகம் செய்தவர். ராமாயணம் போன்ற இதிகாசங்களில் இருந்து நாம் அனைவரும் உத்வேகம் பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.ராமாயண வினாடி – வினா போட்டியில் வெற்றி பெற்ற மற்ற மூவர், அபிராம், கீத் கிருஷ்ணன், நவ்நீத் கோபன் ஆகியோர் ஆவர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement