ரெப்போ வட்டி விகிதம் 0.5% அதிகரிப்பு – வீடு, வாகனம், தனிநபர் கடனுக்கான வட்டி அதிகரிக்கும்

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
பண வீக்கம் அதிகமாக இருப்பதால் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளததாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் குறுகிய கால கடனுக்கு விதிக்கும் வட்டி ‘ரெப்போ ரேட்’ என்று அழைக்கப்படுகிறது. இதனை ஏற்றுவது அல்லது குறைப்பது குறித்து ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக்குழு 2 மாதங்களுக்கு ஒருமுறை கூடி, தன் கொள்கையை வகுக்கும்.
அதனடிப்படையில் கடந்த மே மாதம் 4 சதவிகிதமாக இருந்த ‘ரெப்போ ரேட்’ விகிதத்தை 40 புள்ளிகள் (0.4 சதவிகிதம்) உயர்த்தி வட்டி விகிதத்தை 4.40 சதவிகிதமாக உயர்த்தியது ரிசர்வ் வங்கி. இதனைத்தொடர்ந்து கடந்த ஜூன் 8-ம் தேதி மீண்டும் கூடிய இந்தக்குழு, ரெப்போ ரேட் வட்டியை மேலும் 0.50 சதவிகிதம் உயர்த்தியது. இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 4.9 சதவிகிதமாக நிலவி வந்தது. இந்நிலையில், ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி இன்று மேலும் உயர்த்தியுள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரெப்போ வட்டி விகிதம் மேலும் 0.5 சதவிகிதம் உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.
image
இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 5.40 ஆக அதிகரித்துள்ளதால் வீடு, வாகனம், தனிநபர் கடனுக்கான வட்டியும் அதிகரிக்கும். மேலும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தங்கள் தேவைக்காக கடன் வாங்கும்போது இனி கூடுதலாக வட்டி கட்ட வேண்டும்.
ஏற்கனவே கடன் வாங்கியவர்கள் சுழற்சி விகிதத்தில் கடன் வாங்கியிருந்தால் இனி மாத தவணை கட்டணம் உயரும் அல்லது தவணை ஆண்டுகள் கூடும். மேலும் இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறுகையில், பிறநாடுகளைவிட இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 2022- 2023-ம் நிதியாண்டில் 3-வது முறையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. 4 மாதங்களில் மொத்தமாக 1.4 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.