டெல்லி: விலைவாசி உயர்வை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார். ராகுல் காந்தியை கைது செய்து டெல்லி போலீசார் வேனில் ஏற்றினர். விலைவாசி உயர்வு, வேலையின்மை அதிகரிப்பு, ஜிஎஸ்டி வரி உயர்வு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி ஒன்றிய அரசுக்கு எதிர்க்க நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி மாபெரும் போராட்டம் நடத்தி வருகிறது. இந்த போராட்டத்தின் போது அமலாக்கத்துறையினர் செயல்களையும் கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் எம்.பி.க்கள் பேரணியாக சென்றனர். ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ப.சிதம்பரம், சசி தரூர் உள்ளிட்டோரை டெல்லி போலீஸ் கைது செய்தது. 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாக கூறி காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர். மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுவது தான் எங்கள் பணி என்றும்; அதற்காக கைது செய்வதா எனவும் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தார்.பேரணியாக சென்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலரை டெல்லி போலீஸ் தாக்கியதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். தற்போது, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் ஆகியோர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மாலை அவர்கள் விடுவிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது. இதனிடையே விலைவாசி உயர்வை கண்டித்து பிரியங்கா காந்தி தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். காங்கிரஸ் தலைமை அலுவலகம் அருகே பிரியங்கா காந்தி தலைமையில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் மகளிர் அணியினர் கைது செய்யப்பட்டனர். விலைவாசி உயர்வு, பணவீக்கம், ஜிஎஸ்டி உயர்வு குறித்து காங்கிரஸ் கட்சி தங்களின் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.