மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவர் செக்ஸ் வீடியோ மிரட்டலில் ரூ7.5 லட்சத்தை இழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சோஷியல் மீடியா மூலம் பல்வேறு விதமான மோசடிகள் நாள்தோறும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அந்த மோசடியில் ஒரு வகைதான், செக்ஸ் வீடியோ மிரட்டல். ஒருவரது போலியான வீடியோ அல்லது புகைப்படத்தை உருவாக்கி அதன் மூலம் மிரட்டி பணம் பறிக்க பல கும்பல்கள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. அப்படியான ஒரு சம்பவம் மும்பையில் நிகழ்ந்துள்ளது.
மும்பை சின்ச்போக்லி பகுதியைச் சேர்ந்த 43 வயது நபர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றினை கொடுத்துள்ளார். அந்த புகாரில் அதிர்ச்சியான தகவல் ஒன்றினை குறிப்பிட்டுள்ளார். தனியார் நிறுவனம் நடத்திவரும் அந்த நபர் அளித்த புகாரில், “சண்டாகிரஸ் (கிழக்கு) பகுதியில் உள்ள எனது நண்பர் வீட்டில் இருந்தபோது காலை 10 மணியளவில் (ஜூலை 14) எனது பேஸ்புக் மூலம் அங்கித் சர்மா என்ற பெயரில் பெண் ஒருவர் ஃப்ரண்ட் ரெக்வஸ்ட் கொடுத்தார். பின்னர், மெசேஜ் பாக்ஸில் என்னுடன் உரையாடினார். பின்னர், வீடியோ கால் செய்த அவர் அதில் தன்னுடைய ஆடைகளை கழட்ட ஆரம்பித்தார். உடனடியாக நான் அந்த அழைப்பைத் துண்டித்துவிட்டேன். மீண்டும் அந்த பெண் அழைத்தபோது எனது மொபைல் எண்ணை ஷேர் செய்துவிட்டேன்.
இந்த முறை வாட்ஸ் அப் வீடியோ காலில் வந்த அவர் மீண்டும் ஆடைகளை முழுவதுமாக கழட்டினார். பின்னர், என்னுடைய முகத்தை கேமிரா முன்பு காட்டச் சொன்னார். ஏதோ தவறாக நடக்கிறது என்பதை உணர்ந்துகொண்ட நான் உடனடியாக அந்த வீடியோ காலினை துண்டித்துவிட்டேன். பின்னர், அவரது மொபைல் எண்ணையும், பேஸ்புக் பக்கத்தையும் பிளாக் செய்துவிட்டேன்.
இதுநடந்த மறுநாளே எனக்கு சக்ஸேனா என்ற பெயருடையவரிடம் இருந்து வீடியோ க்ளிப் ஒன்று வந்தது. அங்கித் சர்மாவுடன் நான் பேசிய வீடியோ கால் ரெக்கார்ட் செய்யப்பட்டு அது எனக்கு அனுப்பப்பட்டிருந்தது. அந்த வீடியோ க்ளிப்பை அனுப்பிய நபர் தன்னை சைபர் க்ரைம் போலீஸ் என்று அறிமுகம் செய்துகொண்டு, அந்த வீடீயோ க்ளிப் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதால் அங்கித் சர்மா தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். அந்த வீடியோவை டெலிட் செய்ய வேண்டுமென்றால் ரூ.2.5 லட்சம் அனுப்ப வேண்டும் என்று கூறினார். நானும் அனுப்பி வைத்தேன்.
பின்னர், ஜூலை 18ஆம் தேதி போன் செய்த அவர் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி ரூ.5 லட்சம் கேட்டார். நானும் எப்படியோ பணத்தை தயார் செய்து அனுப்பி வைத்தேன். பின்னர், மீண்டும் போன் செய்து அவர் பணம் கேட்ட போதுதான் அவர்மீது எனக்கு சந்தேகம் வந்தது. என்மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துவிடுவதாக மிரட்டினார். மொத்தம் ரூ7.5 லட்சம் அவரிடம் இழந்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.
இந்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM