விஸ்வரூப வளர்ச்சி:
1980 களில் நாடாளுமன்றத்தில் வெறும் 3 எம்பிக்களை கொண்டிருந்த பாஜக இன்று 300 பிளஸ் எம்பிக்களுடன் அசுர பலத்துடன் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. தேர்தல் அரசியலில் பாஜக இப்படி விஸ்வரூபவ வளர்ச்சி அடைந்துள்ளதற்கு மோடி எனும் ஒற்றை மனிதர்தான் காரணம் என்று சொன்னால் அதனை காங்கிரஸ்காரர்கள் மட்டுமல்ல, பாஜகவினரே ஏற்றுக்கொள்ளாதான் செய்வார்கள். அந்த அளவுக்கு தேசிய அரசியலில் ஆளுமைமிக்க தலைவராக மோடி திகழ்கிறார்.
மோடிக்கு இணையான ஆளுமைமிக்க அரசியல் தலைவர்கள் எதிர்க்கட்சிகளில் யாரும் இல்லை என்பதுதான் பாஜகவின் தொடர் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. எதிர்க்கட்சிகளை விட்டு தள்ளுங்கள்… மோடிக்கு இணையான தலைவர்கள் பாஜகவிலேயே இல்லையோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது 2024 எம்பி தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் குறித்த பாஜகவின் முன்னாள் தேசிய தலைவரும், இன்னாள் மத்திய அமைச்சருமான அமித் ஷாவின் சமீபத்திய அறிவிப்பு.
பிரதமர் வேட்பாளர்:
2024 எம்பி தேர்தலிலும் மோடி தான் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என்று பிகார் தலைநகர் பாட்னாவில் அண்மையில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பகிரங்கமாக அறிவித்துள்ளார் அமித் ஷா. அத்துடன் மோடியையே பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி 2024 தேர்தலை பாஜக சந்திக்கும் எனவும் இந்த கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மோடியை விட்டால் ஆளில்லையா?:
மோடி மீண்டும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது பிரதமர் கனவில் இருக்கும் பாஜகவின் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத்துக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் நிச்சயம் அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக தான் இருக்கும்.
இந்த அறிவிப்பின் மூலம், என்னதான் ஊழலற்ற ஆட்சி… நாட்டின் வளர்ச்சி… என்று பாஜக உரக்க பேசி வந்தாலும், தேர்தல் என்று வந்துவிட்டால் தங்களுக்கு மோடியை விட்டால் வேறு ஆளில்லை என்பதை பாஜக ஒப்புகொள்கிறதா என்ன கேள்வி அரசியல் அரங்கில் பரவலாக எழுந்துள்ளது.
75 வயதை நெருங்கும் மோடி:
இதனைவிட முக்கியமான விஷயம்… 75 வயதுக்கு மேல் யாருக்கும் பதவிக் கிடையாது என்பதுடன், யாரும் உயர் பதவியிலும் நீடிக்க முடியாது என்பது பாஜகவில் எழுதப்படாத சட்டமாகவே இருந்து வருகிறது. நாடு முழுவதும் ரத யாத்திரை நடத்தி கட்சியை வளர்த்த அத்வானி 2014 இல் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படாமல் போனதற்கு 75 என்ற வயது வரம்புதான் முக்கிய காரணம்.
அதுவே தற்போதைய பிரதமர் மோடிக்கு 2024 இல் 74 வயதாகிிவிடும். அந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலிலும் அவரே பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தேர்தலிலும் ஒரு வேளை பாஜக வெற்றிப் பெற்று மீண்டும் பிரதமராகி மோடி ஹாட்ரிக் சாதனை புரிந்தாலும், 2025 இல் அவருக்கு 75 வயதாகிவிடும்.
அப்போது பாஜகவின் 75 வயது என்ற நிபந்தனையின்படி, மோடி தீவிர அரசியலில் இருந்து விலகுவாரா அல்லது அவர் ஓரங்கட்டப்பட்டு அவரது இடத்துக்கு யோகி ஆதி்த்யநாத் போன்றவர்கள் கொண்டு வரப்படுவார்களா என்ற கேள்வியையும், பிரதமர் வேட்பாளர் குறித்த அமித் ஷாவின் சமீபத்திய அறிவிப்பு எழுப்பியுள்ளது.