IELTS தேர்வில் மோசடி: அமெரிக்காவில் குஜராத் இளைஞர்கள் சிக்கியது எப்படி?- தீவிர விசாரணை

குஜராத்தில் நடைபெற்ற ஐஇஎல்டிஎஸ் (IELTS) எனப்படும் சர்வதேச ஆங்கில மொழி திறனறியும் தேர்வில் மோசடி நடந்திருப்பது தெரியவந்த அடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
19 முதல் 21 வயது உடைய குஜராத்தைச் சேர்ந்த 6 இளைஞர்கள், கடந்த மார்ச் மாதம் கனடாவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சித்துள்ளனர். அப்போது அமெரிக்க அதிகாரிகள் அவர்களைப் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனைத்தொடர்ந்து நீதிபதி, அந்த இளைஞர்களிடம் கேள்விகள் கேட்டுள்ளார். ஆனால் குஜராத்தைச் சேர்ந்த அந்த 6 இளைஞர்களால் ஆங்கிலத்தில் பதிலளிக்க முடியாமல் திணறியுள்ளனர். இதனால் இந்தி மொழிபெயர்ப்பாளர் ஒருவர் அழைத்துவரப்பட்டு வழக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையின்போது 6 பேரும், குஜராத்தில் IELTS எனப்படும் ஆங்கில மொழி திறனறியும் தேர்வில் தகுதிப்பெற்று கனடா சென்றவர்கள் என்பதும், அங்கிருந்து சட்ட விரோதமாக அமெரிக்கா நாட்டிற்குள் நுழைய முயன்றதும் தெரியவந்தது. கடனாவிற்கு வெளிநாட்டவர்கள் வருவதற்கு IELTS தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்ற நிபந்தனை உள்ள நிலையில் 6 பேரிடமும் IELTS தேர்வு எழுதினீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு IELTS தேர்வில் 6.5-7 மதிப்பெண்கள் புள்ளிகள் பெற்றதாக பதிலளித்துள்ளனர்.
image
அப்படி இருந்தும் அவர்களால் ஒரு வார்த்தை கூட ஆங்கிலத்தில் பேச முடியாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதி, இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில் 6 பேரும் முறைகேடாக ஆங்கில மொழி திறனறியும் தேர்வில் தேர்ச்சி பெற்றது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் மூலம் குஜராத் மாநிலம் மேசனா மாவட்ட காவல்நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதில் நடந்த விசாரணையில், பிடிபட்ட 6 இளைஞர்களில் 4 பேர் மேசனா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், 2 பேர் காந்திநகர் மற்றும் பதானைச் சேர்ந்தவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து குஜராத் போலீசார் தனிப்படை அமைத்து நடத்திய விசாரணையில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட 6 இளைஞர்களும் நவ்சாரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற IELTS தேர்வு எழுதி கனடா நாட்டிற்கு சென்றது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் தேர்வு அறைக்குள் சிசிடிவி கேமராக்கள் அணைத்து வைக்கப்பட்டு மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இதற்கு ஏஜெண்ட் உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த முறைகேட்டில் குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் மூளையாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் ராஜ்கோட், வதோதரா, மேசனா, அகமதாபாத், நவ்சாரி, நதியத், ஆனந்த் நகரங்களிலும் இந்த தேர்வு மோசடி நடத்திருப்பதும், பெரும்பாலானோர் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
image
அமெரிக்கா, கனடா செல்வற்தாக ஒவ்வொரு மாணவரும் தலா ரூ.14 லட்சம் கொடுத்து IELTS சான்றிதழை முறைகேடாக பெற்றுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் குஜராத்தை சேர்ந்த 950 மாணவர்கள் ஆங்கில மொழி திறனறியும் தேர்வில் தேர்வானதாக மோசடியாக சான்றிதழ் பெற்றதையும் போலீசார் கண்டறிந்துள்ளனர். முறைகேடாக ஆங்கில மொழி திறனறியும் தேர்வில் தேர்ச்சி பெற்ற 950 பேரும் அமெரிக்கா அல்லது கனடாவில் இருக்கலாம் என கருதப்படுவதால் அவர்களை கண்டறிவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த முறைகேட்டுக்கு காரணமாக இருந்தாகக் கூறப்படும் தொழிலதிபரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். வெளிநாடுகளில் பணிக்காக செல்வோரின் ஆங்கில மொழித் திறனை கண்டறிவதற்காக IELTS தேர்வு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.