தமிழ் திரைத்துறையின் பிரபல சினிமா ஃபைனான்ஸியர் அன்புச்செழியன், கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்பட நிறுவனத்தை நடத்திவருகிறார். இவர்மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான `பிகில்’ திரைப்பட விவகாரத்தில், அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியிருந்தது. அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.20 கோடி கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சினிமா ஃபைனான்ஸியர் அன்புச்செழியனின் மதுரை காமராஜர் நகரில் இருக்கும் வீடு, அவரின் திரையரங்கம் உட்பட பல இடங்களில் கடந்த 2-ம் தேதி முதல் சோதனை நடத்தினர். அதைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள், கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல்ராஜா உள்ளிட்டோர் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதன் பிறகு வருமானவரித்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், “திரைத்துறையினர் இதுவரை ரூ. 200 கோடி வருமானத்தை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சினிமா பைனான்ஸியர் அன்புச்செழியன் வீட்டில் 26 கோடி ரொக்கம், 3 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக, அன்புச்செழியன், ஞானவேல் ராஜா, எஸ்.ஆர் பிரபு, கலைப்பலி, எஸ் தாணு உள்ளிட்ட திரைப்பிரபலங்ளின் வீடு, அவர்களின் அலுவலகம் என 40 இடங்களில அதிரடி சோதனை நடந்தியதில், கணக்கில் வராத 200 கோடி ரூபாய் சிக்கியிருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறது.