திருமணம் ஆன பெண்ணைப் போல, திருமணம் ஆகாத பெண்ணிற்கும் கருக்கலைப்பில் இருக்கும் சட்டரீதியான உரிமையை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று அழுத்தமாக கூறியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு முக்கியமான கருத்துக்களை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு பதிவு செய்துள்ளது.
இன்றைய விசாரணையின் போது, நீதிபதி சந்திரசூட், “18 வயதினை கடந்த மேஜர் ஆன, திருமணம் ஆகாத ஒரு பெண், தேவையற்ற கருவை சுமக்க நேர்ந்து அதனால் பாதிப்புக்கு உள்ளாகும் தருணத்தில், 24 வார கருவை கலைக்க திருமணமான பெண்ணிற்கு கொடுக்கும் உரிமையில் இருந்து அவரை மட்டும் ஏன் விலக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும்,‘சட்டத்திருத்தத்தில் துணை என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. கணவர் என்று குறிப்பிடவில்லை. இதுவே சட்டம் கொண்டு வந்ததன் நோக்கம் தெளிவாக உள்ளது. திருமணமாகாத, பிரிந்து வாழும், விவாகரத்து பெற்று வாழும் அனைத்து விதமாக பெண்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும். திருமணமாகாத பெண்ணிற்கு கருக்கலைப்பு உரிமையை மறுப்பது என்பது உடல் ரீதியான மற்றும் சுதந்திரத்தை பறிப்பது போன்றதாகும். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது என்பது நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டதுதான். சட்டப்பிரிவு 21-ன் படி அவருக்கு தனிமனித சுதந்திரம் உண்டு” என்று அழுத்தமாக தனது கருத்தினை பதிவு செய்தார்.
திருமணமான பெண்கள் தேவைப்படும் பட்சத்தில் 24 வாரம் வரையிலான தனது கருவை கலைக்க வழிவகைச் செய்யும் சட்டப்பிரிவு 3(2) (பி)-ஐ, திருமணமாகாத பெண்களுக்கும் நீட்டித்து தீர்ப்பு வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இருப்பினும், அட்டார்னி சொலிசிட்டர் ஜெனரல் குறுக்கிட்டு, இந்த விவகாரத்தில் நிபுணர்களின் கருத்து தேவை என்று வலியுறுத்தினார். அதற்கு விரைவில் அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.
முன்னதாக, டெல்லியைச் சேர்ந்த திருமணமாகாத பெண் ஒருவர் தன்னுடைய கருவை கலைக்க மருத்துவர்கள் மறுப்பதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். ஆண் நண்பருடன் ஒருமித்த சம்மதத்துடன் இருந்த உறவின் பேரில் கர்ப்பமடைந்துள்ளார். கர்ப்பம் குறித்து அவருக்கு கடந்த ஜூன் மாதம் தெரிய வரவே, உடனே அவர் கருக்கலைப்பு செய்துகொள்ள மருத்துவர்களை நாடியுள்ளார். ஆனால் திருமணமாகாதவர் என்ற காரணத்தை சுட்டிக் காட்டி அவருக்கு கருக்கலைப்பு செய்ய மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். இதனையடுத்து அப்பெண் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார். அங்கும் அவரது கருக்கலைப்புக்கு எதிராகவே தீர்ப்பு வந்தது. பின்னர் அந்தப் பெண் உச்ச நீதிமன்றத்தை நாடினார். மருத்துவம் ஒத்துழைப்புக்கு அளிக்கும்பட்சத்தில் அந்த பெண்ணிற்கு கருக்கலைப்பு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த விவகாரத்தில் முறையாக சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் தற்போது உச்சநீதிமன்றம் கருத்துக்களை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM