சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியில் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கொளத்தூர் பகுதியில் உள்ள ஒரு ஏக்கர் நிலத்தில் குப்பை கிடங்கு அமைப்பதற்கான நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி இறங்கியது. ஆனால் அந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என்பதால் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, வெற்றி என்பவர் உள்ளிட்ட இருவர், உரிமையியல் நீதிமன்ற உத்தரவுகளையும், தீர்வு அதிகாரி பிறப்பித்த உத்தரவையும் இணைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்ற உத்தரவின்படி நிலம் வெற்றி உள்ளிட்ட இருவருக்கு சொந்தமானது என்பதால், குப்பை கிடங்கு அமைக்க கூடாது என உத்தரவிட்டது.
இந்த நிலையில், போலி ஆவணங்களை தாக்கல் செய்து நிலம் தங்களுக்கு சொந்தமானது என உரிமையியல் நீதிமன்றத்தில் உத்தரவை பெற்றுள்ளதாக கூறி, இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “போலி ஆவணங்கள் மூலம் நிலம் தங்களுக்கு சொந்தமானது என உரிமையியல் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுள்ளது நிரூபணமாகியுள்ளதாக கூறி, உரிமையியல் நீதிமன்ற உத்தரவுகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், அரசுக்கு சொந்தமான நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கும்படியும், போலி ஆவணங்கள் பயன்படுத்தி உரிமையியல் நீதிமன்றத்தில் உத்தரவை பெற்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படியும் மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.