பொள்ளாச்சி அருகே தாய் – மகன் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாக மிரட்டி, 9 வயது சிறுவனிடம் பணம் பறித்த அதிர்ச்சி சம்பவத்தில் 3 சிறார்கள் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நான்காம் வகுப்பு படித்து வரும் 9 வயது மாணவனிடம் அவன் டியூசன் செல்லும் இடத்தில் 17 வயதுடைய 3 சிறுவர்கள் நண்பர்களாக பழகி உள்ளனர். இந்நிலையில் 4 வயது சிறுவனின் புகைப்படத்தையும் அவனது தாயார் புகைப்படத்தையும் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவோம் என்று 3 சிறுவர்களும் இந்த சிறுவனிடம் அடிக்கடி ஆயிரம், இரண்டாயிரம் என பணத்தை மிரட்டி வாங்கியுள்ளனர்.
சிறுவனும் பயந்து அவ்வப்போது வீட்டில் இருந்து பெற்றோருக்கு தெரியாமல் பணத்தை எடுத்து அவர்களுக்கு கொடுத்துள்ளான். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் பத்தாயிரம் ரூபாய் காணாமல் போயுள்ளது. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர்கள், சிறுவனை மிரட்டி கேட்டபோது, “என் புகைப்படத்தையும் அம்மாவின் புகைப்படத்தையும் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் பரப்பி விடுவோம்” என்று மிரட்டி கேட்டதால் பணத்தை எடுத்துக் கொடுத்தாக கூறியுள்ளான்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் தந்தை பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் மூன்று சிறுவர்களையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது போக்சோ சட்டம், அச்சுறுத்தி பணம் பறித்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், ஆபாச படங்களை சிறார்களிடம் காண்பித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கூர்நோக்கு இல்லத்திற்கு அழைத்து சென்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM