சென்னை: மழையால் சேதம் அடைந்த குறுவை பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது குறித்து இன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: “தமிழ்நாட்டில் தற்போது தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து அதிக அளவில் பெய்து வருவதாலும், காவிரி, வைகை, தாமிரபரணி மற்றும் தென்பெண்ணை ஆறுகளில் அதிக அளவில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாலும் அருகாமையிலுள்ள வயல்களில் வெள்ள நீர் புகுந்து வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமிருந்து அறிக்கைகள் பெறப்பட்டு வருகின்றன.
ஆற்று வெள்ள நீர் மற்றும் தென்மேற்கு பருவ மழையினால் பாதிப்படையும் வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு எவ்வித விடுபாடுமின்றி உரிய நிவாரணம் விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டு அவர்கள் நலன் பாதுகாக்கப்படும்.
விவசாயிகளின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ள இவ்வரசு, நடப்பு குறுவை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை நெல் போன்ற வேளாண் பயிர்களுக்கும் மற்றும் வாழை போன்ற தோட்டக்கலை பயிர்களுக்கும், தற்போது பெய்து வரும் அதிக பருவமழை போன்ற இயற்கை இடர்பாடுகளினால் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கடந்த ஆண்டைப் போலவே வழங்கப்படும். மாவட்டங்களில் பயிர் சேதம் குறித்து தொடர்ந்து கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
நடப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்படவுள்ள சம்பா மற்றும் மானாவரி குளிர்கால பருவ பயிர்களை பயிர் காப்பீடு செய்திட பயிர் காப்பீட்டுக் கட்டணத் தொகையில் மாநில அரசின் பங்குத் தொகையாக ரூபாய் 2057.25 கோடி நிதியினை அனுமதித்து தமிழ்நாடு அரசு ஆணையும் வெளியிட்டுள்ளது. வரும் சம்பா பருவத்தில் விவசாயிகள் தங்களது பயிர்களை காப்பீடு செய்து கொள்ள வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.