‘லால் சிங் சத்தா’ படத்தில் அமீர்கானின் ராணுவ வீர நண்பராக முதலில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருந்தநிலையில், பின்னர் விலகிக் கொண்டது ஏன்? என்று அவருக்குப் பதிலாக நடித்துள்ள நாக சைதன்யா விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் ஹாங்ஸ் நடிப்பில், கடந்த 1994-ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படம் ‘தி ஃபாரஸ்ட் கம்ப்’. ஆஸ்கர் விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளை அள்ளிய இந்தத் திரைப்படத்தின், அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக் தான் ‘லால் சிங் சத்தா’. இந்தப் படத்தில் கதாநாயகனாக அமீர்கானும், அவருக்கு ஜோடியாக கரீனா கபூரும் நடித்துள்ளனர். அமீர்கானின் நண்பராக, ராணுவ வீரராக நாக சைதன்யா இந்தப் படத்தில் நடித்துள்ளதன் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார்.
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக படம் வெளியிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டு வந்தநிலையில், ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ‘லால் சிங் சத்தா’ படத்தில் அமீர்கான் ராணுவத்தில் பணிபுரிவதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அங்கு மிகவும் வெகுளித்தனமான, அதேசமயத்தில் அமீர்கானின் நண்பராக விஜய் சேதுபதி தான் முதலில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அதன்பிறகு அவர் விலகிக்கொள்ள, அந்தக் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா நடித்தார்.
விஜய் சேதுபதி விலகியது குறித்து பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், அவர் ஏன் விலகினார் என்பது குறித்து தெரியாமலேயே இருந்து வந்தது. இந்நிலையில், சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் நாக சைதன்யா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் மற்றப் படங்களுக்கான கால்ஷீட் பிரச்சனையால் விஜய் சேதுபதி ‘லால் சிங் சத்தா’ படத்தில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி தனது கால்ஷீட் பிரச்னைகள் குறித்து படக்குழுவினரை நேரடியாக சந்தித்து தெரிவித்ததுடன், படத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும் அவர்களிடம் அவர் கூறியுள்ளார் என நாக சைதன்யா தெரிவித்துள்ளார். அதன்பிறகே அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க தன்னை அழைத்தாகவும் குறிப்பிட்டுள்ள நாகசைதன்யா, ‘லால் சிங் சத்தா’ படத்தில் ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்குப் பையனாக நடிப்பது மிகவும் வசதியாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.