இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10-ம் தேதியோடு முடிவடைகிறது. அதனை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம், புதிய குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதையடுத்து, ஜூலை 6 ஆம் தேதி தொடங்கிய குடியரசுத் துணைத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 19 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக, மேற்குவங்க மாநிலத்தின் அப்போதைய ஆளுநர் ஜக்தீப் தன்கர் அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மார்கரெட் ஆல்வா களமிறங்கினார்.
இந்த நிலையில், திடீரென, குடியரசு துணைத் தலைவர் தேர்தலிலிருந்து விலகுவதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்தது. இப்படி பல்வேறு அரசியல் நிகழ்வுகளுக்கு மத்தியில், ஏற்கெனவே அறிவித்தபடி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. பிரதமர் மோடி, மன்மோகன் சிங் உட்பட பலரும் இன்று காலைமுதலே வாக்களிக்கத்தனர். மாலை 5 மணியளவில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
இந்த நிலையில், குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்துமுடிந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக, மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநர் ஜக்தீப் தன்கர் 500-க்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றிப்பெற்றுள்ளார். பதிவான 725 வாக்குகளில் 528 வாக்குகள் பெற்றிருக்கிறார்ஜக்தீப் தன்கர். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஆல்வா, 182 வாக்குகள் பெற்றார். 15 வாக்குகள் செல்லாத வாக்குகளாக கணக்கெடுக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் 14-வது குடியரசு துணைத் தலைவராக ஜக்தீப் தன்கர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.