வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பர்மிஹங்காம்: காமன்வெல்த் போட்டியில் மல்யுத்தத்தில் தங்கத்தை தவற விட்டதற்காக கண்ணீர் விட்ட இந்திய வீராங்கனைக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறியுள்ளார். இதற்காக பலரும் மோடியை பாராட்டி வருகின்றனர்.
பிரிட்டனின் பர்மிங்ஹாமில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டில் பெண்களுக்கான 50 கிலோ பிரிஸ்டைல் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை பூஜா கெலாட் வெண்கலம் வென்றார்.
இதன் பின்னர் பேட்டியளித்த பூஜா, ”அனைவரிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். தங்கம் வென்று இந்த மண்ணில் நம் தேசிய கீதத்தை ஒலிக்க வைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் நடக்கவில்லை. என் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அவற்றை சரி செய்வேன்” என கண்ணீர் விட்டபடி கூறினார்.
இந்த வீடியோவை மேற்கொள் காட்டி பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு: பூஜா நீங்கள் வென்றுள்ள பதக்கம் கொண்டாட்டங்களுக்கு அழைப்பு விடுகிறது அன்றி மன்னிப்பு அல்ல. உங்கள் வாழ்க்கை பயணம் எங்களுக்கெல்லாம் உத்வேகம் அளிக்கிறது. உங்கள் வெற்றி எங்களை மகிழ்விக்கிறது. எதிர்காலத்தில் பெரிய விஷயங்களுக்கு வித்திட்டுள்ளீர்கள் நீங்கள். பிரகாசமாக இருங்கள் எனக்கூறியுள்ளார்.
பிரதமரின் இந்த பதிவு பலரின் கவனத்தை பெற்றுள்ளது. அவரை பாராட்டி வருகின்றனர்.
இதனை பார்த்த பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்ட பதிவு: இந்தியா, தனது தடகள வீரர்களை எப்படி முன்னிலைபடுத்துகிறது என்பதை பார்க்க வேண்டும். வெண்கலம் வென்ற பூஜா கெலாட், தங்க பதக்கம் வெல்ல முடியாததற்கு வருத்தத்துடன் மன்னிப்பு கோரினார். அவருக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். இது போன்ற செய்தியை பாகிஸ்தான் பிரதமர் அல்லது அதிபரிடம் இருந்து எதிர்பார்க்க முடியுமா? பாகிஸ்தான் வீரர்கள் பதக்கம் வெல்வது அவர்களுக்கு தெரியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இணையதளவாசி ஒருவர் கூறுகையில், அரசியல் கொள்கை வேறுபட்டிருக்கலாம். ஆனால், ஒரு நாட்டின் தலைவர், தனது வீரர்களுக்கு சொல்லிய வார்த்தைகள் பாராட்டுக்குரியவை எனக்கூறியுள்ளார். இதேபோல், பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement