மதுரை: ”அன்று ஒன்றிய அரசு, ஒன்றிய பிரதமர் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின் இன்று இந்திய பிரதமர் என்கிறார். எல்லாம் பயம், பயம், என்று முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
திமுக, பாஜக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் நேற்று முன்னாள் அமைச்சரும், மாநகர செயலாளருமான செல்லூர் கே.ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்களை வரவேற்று செல்லூர் கே.ராஜூ பொன்னாடை போர்த்தினார்.
அதன்பின், செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாற்று கட்சிகளில் இருந்தும், ஆளும்கட்சி திமுகவில் இருந்தும் அதிமுகவிற்கு ஏராளமானோர் வந்துள்ளனர். இவர்களில் இளைஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளனர். தற்போது ஆளும்கட்சி செயல்பாடு சரியில்லை. பொதுமக்களை ஏமாற்றி பொய்யான வாக்குறுதிகளை திமுக தெரிவித்ததாகவும், அதனால், பொதுவெளியில் எங்களால் தலைகாட்ட முடியவில்லை என்றும் திமுகவில் இருந்து இன்று அதிமுகவில் சேர வந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிமுக சென்ற தேர்தல்களில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு கே.பழனிசாமி தலைமையில் சிறந்த எதிர்கட்சியாக அதிமுக செயல்படுகிறது. திமுக வந்ததும் மது ஆலைகள் மூடப்படும் என்று பிரச்சாரத்திற்கு போன இடமெல்லாம் கனிமொழியும், உதயநிதியும் தெரிவித்தனர். ஆனால், இப்போது அதை பற்றி கேள்வி கேட்டாலே ஓட்டம் பிடிக்கின்றனர். இதுபோல் எய்ம்ஸ், நீட் போன்ற எத்தனையோ வாக்குறுதிகளை கூறி கொண்டே போகலாம்.
பொதுவாக திமுக அரசு மகளிருக்கு இலவசம் என்று மக்களை ஏமாற்றுகிறார். 8 கோடி பெண்கள் இந்த ஒரு ஆண்டில் இலவச பஸ்சில் பயணம் செய்து பயனடைந்துள்ளனர். பஸ்சில் செல்லும் பெண்களுக்கு டிக்கெட்டும் கொடுப்பதில்லை. டோக்கனும் கொடுப்பதில்லை. இவர்கள் எப்படி 8 கோடி பேர் பயனடைந்தார்கள் என்று உறுதியாக கூறுகிறார்கள். அந்த துறையின் முதன்மை செயலாளராக இப்படியொரு தகவலை தவறாக கூறுகிறார். இப்படிதான் இவர்கள் ஆட்சி புள்ளி விவரமெல்லாம் மேலோட்டமாக உள்ளது.
மாதம் மாதம் மின்கணக்கீடு செய்யப்படும் என்றார்கள். ஆனால், எதுவும் நடக்கவில்லை. மின்கட்டணத்தை உயர்த்திவிட்டார்கள். மின்சார மீட்டர்கள் பொருத்தப் போகிறார்களாம். அதற்கு வாடகை வசூலிக்க போகிறார்களாம். இப்படி மக்களை பாதிக்கும் விஷயங்களை மட்டுமே திமுக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. திமுக அமைச்சர்கள் மீது அமலாக்கத் துறை சோதனை செய்துவிடுவார்கள் என்ற பயத்தில்தான் திமுக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று எவ்வளவு தூரம் சென்று மோடியை வரவேற்கிறார். ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒன்றிய அரசு, ஒன்றிய பிரதமர் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது இந்திய பிரதமர் என்று கூறுகிறார். எல்லாம பயம் பயம். அதுதான் இந்த மாற்றத்திற்கு ஒரே காரணம்,” என்றார்.