தொடரும் விலைவாசி உயர்வு… பாஜக, காங்கிரஸ் சொல்வது என்ன?!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18-ம் தேதி தொடங்கியது. கூட்டத்தில் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்ட விவகாரங்களை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், அரசைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

பணவீக்கம்

பின்னர் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்ட பிரச்னைகளைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி-க்கள் பலரும் கைதுசெய்யப்பட்டனர். இதேபோல், ‘கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 5 வயது வரையிலான குழந்தைகளில் ரத்த சோகையால் பாதிக்கப்படுவோர் 58.6 சதவிகிதத்திலிருந்து 67.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ரத்த சோகைக்கு ஒரே காரணம் போதிய உணவு இல்லாததுதான். ஆனால், பணவீக்கம் மக்களைப் பாதிக்கவில்லை என்று நிதியமைச்சர் கூறுகிறார்’ எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கரு.நாகராஜன்-பாஜக

தொடர்ந்து அதிகரிக்கும் விலைவாசி உயர்வு 2022-ல் பா.ஜ.க-வுக்கு தலைவலியாக அமையுமா என்பது குறித்து தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜனிடம் கேட்டோம்.

“ராகுல் காந்தி, சோனியா காந்திமீது நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடங்கியதிலிருந்தே காங்கிரஸார் பைக், கார்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஊழல் செய்வதை எதிர்த்து மக்கள் கேள்வி கேட்ட உடனே புது விதமான பிரச்னையை உருவாக்க விலைவாசி உயர்வைக் கையில் எடுத்துள்ளார்கள். விலைவாசி உயர்வைக் காரணம் காட்டி குறிப்பாகத் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியினர் போராடுவது கேலிக்கூத்தான ஒன்றாக இருக்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர் 300 ரூபாய் விற்ற சிமென்ட் மூட்டை 450 ரூபாயாக உயர்ந்துள்ளது.

எல்லா பொருள்களுமே விலை ஏறிவிட்டது. தமிழ்நாட்டில் காங்கிரஸ், தி.மு.க-வை எதிர்த்துத்தான் போராடி இருக்க வேண்டுமே தவிர பா.ஜ.க-வை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் இல்லை. சிலிண்டருக்கு வழங்கப்பட்டு வந்த 200 ரூபாய் மானியம் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது உண்மை தான். ஆனால், அதை தற்போது வழங்கி வருகிறோம். இலங்கை, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு உதவும் நாடாக இந்தியா வளர்ந்துள்ளது. உட்கட்டமைப்பை உயர்த்தியுள்ளோம். விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது போன்ற போலியான கட்டமைப்பை ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். இது எந்த விதத்திலும் பா.ஜ.க-வின் வெற்றியைப் பாதிக்காது” என்றார்.

லட்சுமி ராமச்சந்திரன் – காங்கிரஸ்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் லட்சுமி ராமச்சந்திரனிடம் கேட்டபோது, “விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி, வேலையின்மை உள்ளிட்டப் பிரச்னைகளை பேச நாடாளுமன்றத்தில் அனுமதிக்கவில்லை. சொல்லப்போனால் இதையெல்லாம் பிரச்னை என்றே பா.ஜ.க நினைக்கவில்லை. 60 சதவிகிதம் வாக்குகள் எதிர்கட்சிகளிடம் இருக்கிறது. ஆனால், அதை அவர்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. மக்கள் சார்பாகக் கேள்வி கேட்பவர்களை பா.ஜ.க அரசு குறிவைத்துத் தாக்குகிறது. போராட்டம் செய்த பெண் எம்.பி-க்களைக் கூட மிகவும் மோசமாக போலீஸார் கையாண்டனர். விலைவாசி உயர்வு கண்டிப்பாக பா.ஜ.க.வு-க்குத் தேர்தல் நேரத்தில் பாதிப்பை உண்டாக்கும். மக்கள் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டார்கள். ஆனால், இனியும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். வேலைவாய்ப்பை உருவாக்குவதற்குக் கூட பா.ஜ.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெரு முதலாளிகளுக்குச் சாதகமாகவே திட்டங்கள் அமைகின்றன” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.