கோவில்பட்டியில் பாத்திரக்கடை உரிமையாளரை கடத்தி ரூ 5 லட்சம் பறித்த பெங்களூர் கும்பலை சினிமாவை மிஞ்சும் வகையில் துரத்திச் சென்று கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் தெருவைச் சேர்ந்தவர் தங்கம். இவர், இளையரசனேந்தல் சாலை ரயில்வே சுரங்க பாலம் அருகே பாத்திரம் மற்றும் இரும்பு கடை நடத்தி வந்திருக்கிறார். இந்நிலையில், நேற்று மதியம் இவர் கடையில் இருந்தபோது, 6 பேர் கொண்ட கும்பலொன்று தங்களை போலீஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவரிடம் பேச்சு கொடுக்க தொடங்கியுள்ளனர்.
பேச்சின்போது, `இந்தக் கடையில் திருட்டு பொருட்கள் வாங்கியுள்ளீர்கள். அதுதொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்ல வந்துள்ளோம்’ என்று கூறி அவரை விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துள்ளனர். இதற்கு தங்கம் மறுக்கவே வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து கரூர் டோல்கேட் அருகே சென்றதும் `உடனடியாக ரூ.20 லட்சம் கொடுத்தால் விட்டு விடுவோம், இல்லை என்றால் கைது செய்து அடைத்து விடுவோம்’ என்று அவரை மிரட்டியுள்ளனர்.
இதைக்கேட்ட தங்கம், தான் ரூ.5 லட்சம் தருவதாக கூறியதை அடுத்து தனது மகனிடம் பணத்தை எடுத்து வரச்சொல்லி உள்ளார். இதையடுத்து விருதுநகர் அருகே பணத்தை பெற்றுக் கொண்ட அந்த கும்பல் தங்கத்தை விடுவித்துள்ளது. இதையடுத்து அங்கிருந்து சென்ற தங்கம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை அடையாளம் வைத்து, கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் மேற்பார்வையில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தலைமையில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து டோல்-கேட்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்நிலையில் கார், கரூர் அரவக்குறிச்சி டோல்கேட் பகுதியில் இருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்திருக்கிறது. இதையடுத்து போலீசார் அங்குள்ள போலீசார் துணையுடன் மோசடி கும்பலை கையும் களவுமாக பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த கும்பல் தடுப்புகளில் நிற்கமால் தகர்த்து விட்டு சென்றுள்ளது.
அவர்களை தொடர்ந்து விரட்டிச் சென்ற அப்பகுதி போலீசார், வெள்ளியணை காவல் நிலைய சரகம் ஆட்டையாம்பரப்பு அருகில் காரை மடங்கிப் பிடித்தனர். பின்னர் காரில் இருந்த பெங்களூரைச் சேர்ந்த பரன்கவுடா, தாஸ், டேனியல், பவுல், பெரோஸ் கான் ஆகிய 5 பேரை கைது செய்தனர். கைதிகளிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM