உணவுப் பொருள்களைப் பதப்படுத்துதல், பேக்கிங் செய்தல் உள்ளிட்ட உணவு தொழில்நுட்பம் தொடர்பாக இந்தியத் தொழில் கூட்டமைப்பு (CII) இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஃபுட் புரோ என்ற கண்காட்சியை நடத்தி வருகிறது. இதன் 14-வது கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 5) ஆரம்பித்தது, இன்று (ஆகஸ்ட் 7) வரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, பசுமை விகடன் ஊடக ஆதரவு 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்கேற்க, அவர்களுடைய தயாரிப்புக்களைக் காட்சிப்படுத்தும் அரங்குகள், வர்த்தக நிறுவனங்களின் மாநாடுகள், கருத்தரங்குகள் என கோலாகலமாக நடைபெற்ற சி.ஐ.ஐ. கண்காட்சியிலிருந்து சில துளிகள்…
* உலகளவில், விவசாய உற்பத்தியில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம் என்பது போன்ற பாசிட்டிவ் புள்ளி விபர ஸ்லைடுகளுடன் மாநாடு தொடங்கப்பட்டது.
* இந்தியா முழுவதிலுமிருந்து பல்வேறு வகையான பேக்கிங், பேக்கிங் தொடர்பான பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள்.. உணவுப் பொருள்களைப் பதப்படுத்துகிற தொழில்களுக்கான வாய்ப்புகள், உணவுப்பொருள்களைப் பதப்படுத்தும் தொழில்நுட்பத்தின் நவீன கண்டுபிடிப்புகள், அதற்குத் தேவையான தொழில்நுட்பங்கள்… குளிர் சேமிப்பு, கிடங்கு, உணவு, விவசாயம் மற்றும் தளவாடங்கள் தொடர்புடைய தயாரிப்புகளில் ஈடுபட்டிருக்கும் அனைத்து நிறுவனங்களுக்குமான நவீன தொழில்நுட்பம் என உணவுப்பொருள்கள் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைப்பதற்கான அத்தனை கதவுகளும் இந்தக் கண்காட்சியில் திறந்து வைக்கப்பட்டன என்றே சொல்லலாம்!
* ‘ஃபுட் புரோ 2022’ தலைவரும், புளூ ஸ்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான பி. தியாகராஜன், நிகழ்ச்சியின் முதல் நாள் இக்கண்காட்சியின் கருப்பொருள் குறித்துப் பேசும்போது, “உணவுப்பொருள்களின் உற்பத்தி வருங்காலங்களில் அதிகரிக்கும். தற்போது, சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை உணவுப்பதப்படுத்தும் தொழில் சுமார் 11.18% வளர்ச்சியடைந்துள்ளது. உணவுப்பொருள்கள் வீணாவதைத் தடுக்கவும், உற்பத்தியாளர்கள் லாபம் பெறவும் குளிர் சேமிப்பு முறை அவசியம். அதற்கான உபகரணங்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருக்கின்றன” என்று குறிப்பிட்டார்.
* இணையம் வழியாக மாநாட்டில் கலந்துகொண்ட உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர். சக்கரபாணி, ”இந்திய அளவில், காய்கறி உற்பத்தியில் 7 சதவிகிதமும் பழ உற்பத்தியில் 12 சதவிகிதமும் தமிழகம் பங்களித்துக் கொண்டிருக்கிறது. உணவுப்பதப்படுத்துதலிலும் இந்திய அளவில் தமிழகம் சிறந்த இடத்தில் இருக்கிறது. இந்திய மக்களின் பசியாற்ற நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்” என்றார் உணர்ச்சிகரமாக..!
* இந்தியத் தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவரும், பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் இணை நிறுவனர் மற்றும் இணை நிர்வாக இயக்குனருமான சுசித்ரா கே. எல்லா, ”வேளாண்மை மற்றும் உணவுப்பதப்படுத்துதல் துறைகளில் தமிழகத்தின் தலைமைத்துவம்பற்றி தமிழ்நாடு வேளாண்மைத் துறையின் சிறப்பு அரங்கு மூலம் தெரிந்துகொள்ள முடியும்” என்று தன் உரையின் இடையில் பெருமிதப்பட்டிருந்தார். அதற்கேற்றார்போல, கண்காட்சியின் இரண்டாம் நாளான நேற்று தமிழ்நாடு வேளாண்மைத்துறையின் சிறப்பு அரங்கம் உணவுத்துறையை சார்ந்தவர்களால் நிறைந்து வழிந்தது.
* தொடக்க விழா அன்று ‘உணவுப் பதப்படுத்தும் துறையில் மதிப்பைத் திறத்தல்’ குறித்த வெள்ளை அறிக்கையை சிஐஐ வெளியிட்டது.
* மூன்று அரங்கங்களில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில், இரண்டு அரங்கங்களில் உணவுப்பதப்படுத்துதல், பேக்கிங், குளிர் சேமிப்பு போன்ற உணவுத்தொழில்கள் தொடர்பான நவீன உபகரணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
விதவிதமான அரவை இயந்திரங்கள், உணவுப்பொருள்களின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கும் உபகரணங்கள், விதவிதமான அளவுகளில் இட்லி மாவை வார்க்கும் இயந்திரம், குளிர் சாதன யூனிட், நுகர்வோர்களை கவரும் வண்ணம் பேக்கிங் செய்யும் பல்வேறு வகையான இயந்திரங்கள், ஒரு டன் உணவுப்பொருள்களைவரை பதப்படுத்தும் குளிரூட்டும் அறை, உணவுத்தொழிலுக்காக உருளைக்கிழங்கை தோல் சீவி வில்லைகளாக நறுக்கும் உபகரணங்கள், விதவிதமான அரவை இயந்திரங்கள் என எண்ணற்ற இயந்திரங்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
* இக்கண்காட்சியில் தமிழ்நாடு அரசின் ஊரகத்தொழில்கள் மற்றும் சிறு, குறு தொழில்கள் துறை அமைச்சர் டி.எம். அன்பரசன், தமிழக அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண்துறை செயலர் சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.