எஸ்.எஸ்.எல்.வி டி1 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட 2 செயற்கைக்கோள்களை பயன்படுத்த இயலாது என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இஸ்ரோவின் எஸ்எஸ்எல்வி டி1 ராக்கெட் இன்று காலை 9.18 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. புவிக் கண்காணிப்பிற்காக அனுப்பப்பட்ட இந்த எஸ்எஸ்எல்வி- டி1 ராக்கெட்டில் இஓஎஸ் 02, ஆசாதி-சாட் என்கிற 2 எடை குறைந்த செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது. அதாவது, 120 டன் எடை கொண்ட எஸ்எஸ்எல்வி ராக்கெட் 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை சுமந்து செல்லும் என்பது இதன் சிறப்பம்சம்.
இந்நிலையில், செயற்கைக்கோள் ஏவி 50 நிமிடங்கள் கடந்த நிலையில் அதிலிருந்து சிக்னல் கிடைக்கவில்லை. இருப்பினும் சிக்னலைப் பெற அனைத்து நிலைகளிலும் விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்தார்.
இந்நிலையில், எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இஓஎஸ்-02, ஆசாதிசாட் ஆகிய இரு செயற்கைக்கோள்களை பயன்படுத்த இயலாது என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எஸ்எஸ்எல்வி ராக்கெட்டிலிருந்து முன்னரே செயற்கைக்கோள்கள் வெளியேறியதால் நிலைநிறுத்த முடியவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது. செயற்கைக்கோள்கள் வட்டப்பாதைக்கு பதில் நீள் வட்டப்பாதையில் நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: வீட்டில் தேசிய கொடி ஏற்றும்போது இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM