நிதி ஆயோக் அமைப்பின் ஏழாவது நிர்வாகக் கவுன்சில் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதில் தமிழக அரசு சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தினால் எந்த நன்மையும் இல்லை என்று தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் என்று தெரிவித்து இதில் பங்கேற்கபோவதில்லை என்று நிதி ஆயோக் அமைப்பிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக காணொளி காட்சி மூலம் நடைபெற்று வந்த நிர்வாக கவுன்சில் கூட்டம், முதல் முறையாக தற்போது நேரடியாக நடைபெறுகிறது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் , துணைநிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் மற்றும் முழுநேர உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாசார மையத்தில் இன்று நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில், வேளாண் துறையில் தன்னிறைவை எட்டுதல், மாற்றுப் பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம் மற்றும் நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இதனிடையே, இன்று கருணாநிதி நினைவு நாள் என்பதால் நினைவு நாள் தொடர்பாான நிகழ்வுகளில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பதால், தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பதில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இந்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். இந்நிலையில் இன்றைய நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மாநில அரசுகளுக்கு மதிப்பு அளிக்காமல் நடத்தும் நிதி ஆயோக் கூட்டம் தேவையில்லாதது எனக் குறிப்பிட்டுள்ளார்.
நிதி ஆயோக் உருவானதன் நோக்கமே வலுவான மாநிலங்களால் வலுவான நாட்டை உருவாக்குவது. திட்டக்குழு இருக்கும் போது மாநில அரசுகளின் கருத்துகளுக்கு மதிப்பிருக்கும். ஆனால் நிதி ஆயோக்கில் இந்த மாதிரியான உரையாடல் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார். கூட்டாட்சி அரசாங்கத்திற்கு எதிராகவே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
வரி விதிப்புகளில் கூட மாநில அரசாங்கத்தின் கருத்துகளை கேட்பதில்லை. வலுவான மாநிலங்களால் மட்டுமே வலுவான இந்தியாவை உருவாக்க முடியும் என்று கூறியுள்ளார். நிதி ஆயோக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதால் எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே அவரது கடிதத்தை துர்தஷ்ட வசமானது என்று நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையே புதிய ஒத்துழைப்பு மற்றும் கூட்டு முயற்சிக்கு வித்திடும் வகையில் இந்த கூட்டம் அமையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவர் இந்த கூட்டத்தில் பங்கேற்பது சந்தேகம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக கடந்த மூன்று முறை தெலுங்கானாவிற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை தெலுங்கானா முதலமைச்சர் கேசிஆர் வரவேற்க செல்லவில்லை. அதற்கு பதிலாக மாநில அமைச்சரே பிரதமரை வரவேற்றார். அதுமட்டுமின்றி, தெலுங்கானாவில் ராமானுஜர் சிலை திறப்பு உள்ளிட்ட அரசு நிகழ்ச்சியில் பிரதமர் , ஆளுநர் மட்டுமே பங்கேற்றனர். மாநில முதலமைச்சர் உடல் நலக்குறைவு காரணமாக பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளும் மத்திய பாஜக அரசுடன் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். மேலும் 2024 ஆம் நடைபெறும் மக்களவை தேர்தலில் வலுவான எதிர்கட்சி கூட்டணியை உருவாக்க, நாடு முழுவதும் முக்கிய எதிர்கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பரபரப்பான இந்த அரசியல் சூழலில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.