கேரளாவில் நடந்த ராமாயண வினாடி வினா போட்டியில் முஸ்லிம் மாணவர்கள் இருவர் வெற்றி பெற்றனர்.
கேரளா மாநிலம் மலப்புரத்தில் ராமாயண வினாடி வினா போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் மாநிலம் முழுதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். இறுதியில் 5 மாணவர்கள் வெற்றி பெற்றனர். இதில் முகமது ஜபீர் மற்றும் முகமது பஷீத் ஆகிய இருவர் மலப்புரம் மாவட்டம் வளஞ்சேரியில் உள்ள கே.கே.எஸ்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லுாரியை சேர்ந்த மாணவர்கள் ஆவார். இந்த கல்லுாரியின் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்து, சீக்கியம், பவுத்தம் உள்ளிட்ட மதங்களின் கலாசாரம், இலக்கியம் சம்பந்தமான பாடங்களும் உள்ளன.
இது குறித்து முகமது ஜபீர் மற்றும் முகமது பஷீத் கூறுகையில், ”ராமாயணமும், மகாபாரதமும் இந்திய கலாசாரத்தின் ஒரு அங்கம். எனவே, அனைவரும் இவற்றை படிக்க வேண்டும். அனைத்து மதங்களுமே நல்லிணக்கத்தைத் தான் போதிக்கின்றன; வெறுப்புணர்வை போதிக்கவில்லை. ராமாயணத்தின் நாயகனான ராமர், நீதியின் உருவகமாக செயல்பட்டவர்; சகிப்புத்தன்மை மற்றும் அமைதியை போதித்தவர். தன் தந்தை தசரதனுக்கு அளித்த வாக்குறுதிக்காக, தனது ஆட்சியையே தியாகம் செய்தவர். ராமாயணம் போன்ற இதிகாசங்களில் இருந்து நாம் அனைவரும் உத்வேகம் பெற வேண்டும்” என்று அவர்கள் கூறினர்.
இதையும் படிக்க: வீட்டில் தேசிய கொடி ஏற்றும்போது இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM