2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் துவங்கிய ராம் படப்பிடிப்பு
கடந்த சில வருடங்களுக்கு மோகன்லால், இயக்குனர் ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவான த்ரிஷ்யம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து மீண்டும் இவர்கள் கூட்டணியில் இரண்டாவதாக துவங்கப்பட்ட படம் தான் 'ராம்'. திரிஷா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட பாதி முடிவடைந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடத்தப்பட வேண்டும் என்பதால், அப்போதைக்கு அதை தள்ளி வைத்துவிட்டு அதன் பின்னர் மோகன்லாலை வைத்தே திரிஷ்யம்-2, டுவல்த் மேன் என இரண்டு படங்களை அடுத்தடுத்து இயக்கி அவை இரண்டையும் வெற்றி படமாகவும் கொடுத்துவிட்டார் ஜீத்து ஜோசப். தற்போது மலையாள இளம் நடிகர் ஆசிப் அலி நடிக்கும் படத்தையும் இயக்கி முடித்து விட்டார்.
இன்னொரு பக்கம் மோகன்லால் தற்போது, தான் இயக்கி வரும் பாரோஸ் என்கிற படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்தார். இந்த நிலையில் தற்போது வெளிநாட்டில் ராம் படப்பிடிப்பை நடத்துவதற்கு சூழல் சாதகமாக இருப்பதால், முழுவீச்சில் ராம் படத்தின் படப்பிடிப்பை மீண்டும் துவங்க முடிவு செய்த ஜீத்து ஜோசப் தற்போது எர்ணாகுளம் பகுதியில் 10 நாட்கள் கொண்ட படப்பிடிப்பை மீண்டும் துவங்கி நடத்தி வருகிறார். இதன் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருவதை அவரை அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துள்ளார். இங்கே படப்பிடிப்பு முடிந்ததும் இதைத் தொடர்ந்து லண்டன் சென்று மீதி படத்தையும் ஒரேமூச்சில் முடித்து விட்டு வர திட்டமிட்டுள்ளாராம் ஜீத்து ஜோசப்.