டெல்லி அருகில் இருக்கும் காஜியாபாத்தில் அதிகாலை 2 மணிக்கு பெண் ஒருவர் இழுத்து செல்லக்கூடிய ட்ராலி பேக் ஒன்றை மிகவும் போராடி சாலையில் இழுத்துச் சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக ரோந்து வந்த போலீஸார் அப்பெண்ணிடம் எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டனர். ரயில் நிலையத்திற்கு செல்லவேண்டும் என்று கூறினார். உடனே நாங்கள் ரயில் நிலையத்தில் விட்டுவிடுவதாக போலீஸார் தெரிவித்தனர். ஆனால் அப்பெண் போலீஸாரின் உதவியை ஏற்காமல் சாலையில் தொடர்ந்து 200 மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்றார். அவருக்கு ஆட்டோ ரிக்ஷா எதுவும் கிடைக்கவில்லை. போலீஸார் மீண்டும் அப்பெண்ணிடம் ரயில் நிலையம் செல்ல உதவுவதாக தெரிவித்தனர்.
ஆனால் மீண்டும் உதவியை அப்பெண் மறுத்ததால், அவர் எந்த ரயிலில் பயணம் செய்யவேண்டும் என்று கேட்டனர். அதற்கு அவரால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. அதோடு அவரிடம் ரயில் டிக்கெட்டும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் அவரின் பேக்கில் என்ன இருக்கிறது என்று சோதித்த போது அதிர்ச்சியைடந்தனர். பேக்கிற்குள் ஒருவரை கொலை செய்து வைத்திருந்தார். இதனை தொடர்ந்து அப்பெண் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து ஓட முயன்றார். ஆனால் அவரை விரட்டி பிடித்த போலீஸார் கைது செய்தனர்.
தொடர்ந்து அப்பெண்ணிடம் விசாரித்த போது அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது. இது குறித்து போலீஸ் அதிகாரி முனிராஜ் கூறுகையில், “ட்ராலியை இழுத்து வந்த பெண் பிரீத்தி சர்மா, தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அவர் பெரோஸ்(23) என்ற வாலிபருடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தார். பிரீத்தி சர்மா தன்னுடன் சேர்ந்து வாழ்ந்தவரை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் வேறு மதத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள் என்று பெரோஸ் கூறி திருமணத்தை தவிர்த்து வந்தார்.
சம்பவத்தன்று மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிரீத்தி நிர்ப்பந்தம் செய்தார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே பெரோஸ் பிரீத்தியை நடத்தை சரியில்லாதவள் என்று கூறினார். இதனால் கோபத்தில் பிரீத்தி வீட்டில் இருந்த ரேஸர் பிளேடை எடுத்து பெரோஸ் கழுத்தை அறுத்துள்ளார். இதில் இறந்து போன பெரோஸ் உடலை மறைக்க கடையில் இருந்து மிகப்பெரிய ட்ராலி பேக் ஒன்றை வாங்கி வந்தார். அந்த பேக்கில் உடலை வைத்து ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்று ஏதாவது ஒரு ரயிலில் அந்த பேக்கை போட்டுவிட திட்டமிட்டு இருந்தார்” என்று தெரிவித்தார்.