பாட்னா: பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜ கூட்டணி முறிய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக பாட்னாவில் இன்று கட்சி எம்பி, எம்எல்ஏக்களுடன் நிதிஷ் குமார் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இதில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), பாஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபகாலமாக இரு கட்சிகள் இடையே விரிசல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, முதல்வர் நிதிஷ் குமார், ஒன்றிய அரசின் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழா, புதிய ஜனாதிபதி முர்மு பதவியேற்பு விழா, முதல்வர்கள் மாநாடு என அனைத்தையும் புறக்கணித்தார். நேற்று முன்தினம் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தையும் நிதிஷ் புறக்கணித்தார். சமீபத்தில் நிதிஷை சமாதானப்படுத்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பீகார் வந்திருந்தார். பாஜவின் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.இதுமட்டுமின்றி, ஒன்றிய அமைச்சரவையில் தனது கட்சி சார்பில் இருந்த ஒரே ஒரு அமைச்சரான ஆர்சிபி சிங்கின் பதவியையும் நிதிஷ் குமாரே காலி செய்தார். ஆர்சிபி சிங்கின் மாநிலங்களவை பதவிக்காலம் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், அவருக்கு மீண்டும் சீட் தராமல் ஒதுக்கினார். இதனால், எம்பி பதவியை இழந்ததோடு, அமைச்சர் பதவியையும் அவர் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு நிதிஷ் கொண்டு வந்தார். அதோடு, ஒன்றிய அமைச்சரவையில் இனி ஜேடியு இடம் பெறாது எனவும் அக்கட்சி தரப்பில் நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் நிதிஷ், பாஜ உடனான உறவை துண்டிக்க தயாராகி விட்டதாக தகவல்கள் வெளியாகின. இதற்கெல்லாம் காரணம், ஆர்சிபி சிங்கை வைத்து மகாராஷ்டிரா போல் ஆபரேஷன் தாமரை திட்டத்தை அரங்கேற்ற பாஜ மறைமுகமாக திட்டமிட்டதுதான் என கூறப்படுகிறது. ஆர்சிபி சிங் மீது சொத்து குவிப்பு குற்றச்சாட்டை சுமத்திய ஜேடியு இதுதொடர்பாக விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது. இதனால் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக அவர் கட்சியிலிருந்து விலகினார். அப்போது அவர், ‘ஜேடியு மூழ்கும் கப்பல்’ என விமர்சித்தார். அவரை வைத்து பீகாரில் ஜேடியு கட்சியை உடைக்க பாஜ திட்டம் வகுப்பதாக செய்திகள் கசிந்தன. இதனால் கூட்டணியை முறிப்பதற்கான முக்கிய முடிவை நிதிஷ் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக கட்சியின் அனைத்து எம்பி, எம்எல்ஏக்களுடனான முக்கிய ஆலோசனை கூட்டம் பாட்னாவில் இன்று நடத்த ஜேடியு திட்டமிட்டுள்ளது. இதற்காக அக்கட்சியின் அனைத்து எம்பி, எம்எல்ஏக்கள் பாட்னாவுக்கு விரைந்துள்ளனர். கூட்டத்தில் எடுக்கப்படும் எந்த முடிவுக்கும் கட்சி எம்பி, எம்எல்ஏக்கள் கட்டுப்பட வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் தியாகி அறிவித்துள்ளார். இதனால், இந்த விவகாரம் பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.லாலு கட்சி ஆதரவு: லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி துணைத் தலைவர் சிவானந்த் திவாரி நேற்று அளித்த பேட்டியில், ‘‘தேசிய ஜனநாயாக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகி வந்தால், நிதிஷூடன் இணைய நாங்கள் தயாராக இருக்கிறோம். பாஜவை எதிர்ப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எனவே முதல்வர் நிதிஷும் இப்போராட்டத்தில் இணைய சம்மதித்தால், நாங்கள் இணைந்து செயல்படுவோம்’’ என்றார். மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியாவுடனும் நிதிஷ் ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. மார்க்சிஸ்ட் கட்சியும் நிதிஷுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளது. எனவே பாஜ உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்து புதிய ஆட்சியை நிதிஷ் அமைப்பார் என்றும் கூறப்படுகிறது.