தெற்கு ரயில்வே சார்பில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்யும் ரயில்வே டிடிஇ-களுக்கு மொபைல் டேப்லெட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில், 185 எக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ள டிடிஇ-களுக்கு, சுமார் 800 டேப்லெட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இனி பயணிகள் சார்ட் மற்றும் மீதமுள்ள படுக்கை விவரங்கள் யாவும் ஆன்லைனில் அவர்களுக்கு கிடைக்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கடந்த 10 நாட்களாக நடந்து வந்த `டிடிஇ-களுக்கு டேப்லெட் விநியோகிக்கும் பணி’, இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரும் என தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது. இந்த டேப்லெட்ஸ் யாவும், பயணிகள் முன்பதிவு அட்டவணையை டிடிஇ-க்களுக்கு அவர்களின் கைகளுக்குள் கொண்டு வந்துவிடும். இப்படி எல்லாமே கைகளில் உடனுக்குடன் கிடைப்பதால் காலி படுக்கைகளை வேறொருவருக்கு அலெர்ட் செய்வது, உணவு டெலிவரிக்கு ஆர்டர் செய்வோர் – படுக்கை விரிப்புக்கு ஆர்டர் செய்வோர் பற்றிய விவரங்களிலும் வெளிப்படத்தன்மை இருக்குமென கூறப்பட்டுள்ளது.
ரயில் பயணத்தின்போது சிக்னல் பிரச்னைகளும் இருக்கலாம் என்பதால், ஆஃப்லைனிலும் டிடிஇ-க்கள் பயணிகள் அட்டவணையை பதிவிறக்கம் செய்ய வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல டிக்கெட்டை ரத்து செய்வோர் பட்டியலும் ஒரு மணி நேர இடைவெளிக்குள் டிடிஇ-யின் டேப்லெட்டுக்கு இணைய வழியில் அப்டேட் ஆகி தகவல் கிடைத்துவிடும் என்பதால், போலி அடையாளத்துடன் பயணிப்போரை தடுக்க முடியுமென செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
டிசம்பர் 2018-ல் தொடங்கப்பட்ட இந்த திட்டம், இவ்வளவு வருடங்களாக சோதனை முயற்சியாக சென்னை டூ மைசூருக்கான சென்னை சப்தபதி ரயிலிலும்; சென்னை டூ கோவைக்கான சென்னை சப்தபதி விரைவு ரயிலிலும் பின்பற்றப்பட்டு வந்தது. அது வெற்றிகரமாக அமைந்ததை தொடர்ந்து, தற்போது மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ், ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் சேரன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல விரைவு ரயில்களிலும் அதிவிரைவு ரயில்களிலும் பயன்படுத்தப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM