புதுடெல்லி: உ.பி.யின் நொய்டாவில் 93-பி செக்டாரில் பல வீடுகளைக் கொண்ட கிராண்ட ஓமேக்ஸ் சொசைட்டி உள்ளது. இங்கு வசிக்கும் ஸ்ரீகாந்த் தியாகி என்பவர் அண்மையில் அந்தப் பகுதியில் மரக்கன்று நடுவதற்கு அதே பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் ஆட்சேபம் தெரிவித்தார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தியாகி அப்பெண்ணை தரக்குறைவாக பேசி தாக்க முயற்சித்தார்.
இது தொடர்பாக ஸ்ரீகாந்த் தியாகி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரைப் பற்றிய தகவலுக்கு ரூ.25,000 வெகுமதி அறிவித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தியாகி தலைமறைவாக இருக்கும் நிலையில் அவரது வீட்டில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களை அதிகாரிகள் நேற்று புல்டோசர் மூலம் இடித்து அகற்றினர்.
தியாகி தன்னை பாஜக விவசாயிகள் அணி நிர்வாகி என கூறிக் கொள்கிறார். ஆனால் இதனை பாஜக மறுத்துள்ளது. இந்த விவகாரத்தில். தியாகியை கைது செய்யவும் தாக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்கவும் தேசிய மகளிர் உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீகாந்த் தியாகி, கிரேட்டர் நொய்டாவின் சுராஜ்பூரில் உள்ள நீதிமன்றத்தில் சரண் அடைய திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகின.