ஒடிசா மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்றைய தினம் கட்டாக்கில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அமித் ஷா, தேசிய அளவில் ஒடிசா மாநிலத்திற்கு பெரிய அளவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இங்கிருந்து தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆர்.பி.ஐ கவர்னர் சக்திகாந்த மிஸ்ரா, மூன்று மத்திய அமைச்சர்கள் ஆகியோர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றார். பிரதமர் மோடி தேர்தல் வெற்றிகளில் புதிய சாதனை படைத்துள்ளார்.
வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை உடன் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும். பிரதமர் மோடி ஆட்சியில் தான் தலித்கள், பழங்குடியினர் அதிக அளவில் எம்.பிக்களாக இருந்துள்ளனர். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 27 பேர் எம்.பிக்களாக பதவி வகித்து வருவதாக தெரிவித்தார். இதையடுத்து புவனேஸ்வரில் “Modi@20 Dreams Meet Delivery” என்ற புத்தக வெளியிட்டு விழா நடைபெற்றது.
இந்த புத்தகத்தில் பிரதமர் மோடி குறித்தும், அவரது செயல்பாடுகள், வளர்ச்சி திட்டங்கள், கொள்கைகள், பிரபலங்களின் பார்வைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதலில் எங்கள் கட்சியை பற்றி பேச விரும்புகிறேன். இந்தி பேசும் மக்களுக்கான கட்சி பாஜக என்று பலரும் கூறினர்.
ஆனால் அவர்களின் வார்த்தைகளை பொய்யாகும் வகையில் வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜக தடம் பதித்துவிட்டது. அதுமட்டுமின்றி இந்தி பேசாத குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் ஆட்சி செய்து வருகிறது. அந்த வரிசையில் ஒடியா மொழி பேசும் ஒடிசா மாநிலத்திலும் பாஜக ஆட்சி விரைவில் அமையும் என்று கூறினார். மேலும் பேசுகையில், நமது நாட்டில் ஜனநாயகத்தின் வேர்களை மோடி வலுவாக்கியுள்ளார்.
கடந்த 1960ஆம் ஆண்டு முதல் ராஜாங்க கொள்கை, குடும்ப ஆட்சி, ஊழல் ஆகிய மூன்று விஷயங்களால் இந்திய அரசியல் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடி புதிய மாற்றை கொண்டு வந்தார். அரசியலில் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அதுமட்டுமின்றி சமத்துவத்தை ஏற்படுத்த பெரிதும் பாடுபட்டுள்ளதாக தெரிவித்தார். வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. அதே ஆண்டு ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலும் நடக்கிறது.
இதைக் கருத்தில் கொண்டு ஒரே கல்லில் இரண்டு இலக்குகளை அடையும் நோக்கில் பாஜக தனது ஆபரேஷனை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மத்தியில் ஆட்சியை பிடிப்பது பாஜகவிற்கு எளிதான விஷயமாக இருந்தாலும், ஒடிசாவில் ஆட்டம் எடுபடாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஏனெனில் கடந்த 2000ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 5 முறை முதல்வராக, அசைக்க முடியாத தலைவராக நவீன் பட்நாயக் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.