காகித விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தினசரி காலண்டர்களின் விலை 40 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
சிவகாசியில் ஒவ்வொரு ஆண்டும் புதுமையான வடிவ மைப்புகளில், புதுப்புது ரகங் களில் தினசரி காலண்டர்கள் தயாரிக்கப்படுவதால், தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் வரவேற்பு உள்ளது. தினசரி காலண்டர் தயாரிக்கும் பணிகள் ஆண்டுதோறும் ஏப்ரலில் தொடங்கும்.
தமிழ்ப் புத்தாண்டான சித்திரை முதல் நாளில் பஞ்சாங்கம் வெளி யாகும். பஞ்சாங்கம் வெளியி டப்பட்டவுடன் தினசரி காலண்டர் தயாரிப்பதற்கான முதல் கட்டப் பணிகள் தொடங்கும்.
காலண்டரில் அச்சிடப்படும் நாள், கிழமை, நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், பவுர்ணமி, அமாவாசை உள்ளிட்டவற்றுடன் ராசிபலன், கவுரி பஞ்சாங்கம், சுப முகூர்த்த நாட்கள், முக்கியப் பண் டிகைகள், அரசு விடுமுறைகள், முக்கியத் தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாள் உள்ளிட்ட பல அம்சங்களுடன் காலண்டர்கள் வடிவமைக்கப்படும். தினமும் ஒரு பொன்மொழி, சித்த மருத்துவக் குறிப்புகள், உலகின் முக்கிய நிகழ்வுகள் பற்றிய குறிப்புகளும் இடம்பெறும்.
காலண்டர்கள் அச்சிடும் பணிகள் ஆடிப்பெருக்கு தினத்தில் தொடங்கப்பட்டு, தற்போது மும்மு ரமாக நடைபெற்று வருகின்றன. செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 4 மாதங்களும் காலண்டர் தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்படையும்.
இந்த ஆண்டு புது வரவாக அனைவரையும் கவரும் வகை யில் விடுதலைப் போராட்ட வீரர் கள், அரசியல் தலைவர்கள், பண்டிகைகள், முக்கிய நாட்கள் குறித்த தகவல்கள் அடங்கிய வீடியோ லிங்க் உள்ள க்யூஆர் கோடுடன் கூடிய காலண்டர்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், சிறுவர்களைக் கவ ரும் வகையில் கார்ட்டூன் காலண் டர்களும் அச்சிடப்படுகின்றன.
அதே நேரம், காகித விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு போன்ற காரணங்களால் 2023-ம் ஆண்டுக்கான காலண்டர் விலை கணிசமாக உயரும் என்று உற்பத் தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர் ஜெய்சங்கர் கூறியதாவது:
காலண்டர் தயாரிக்கும் காகிதம், வண்ண மை ஆகியவற்றின் விலை கடந்த ஆண்டை விட உயர்ந்துள்ளது. அட்டை, காலண்டர் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 31-ம் தேதி வரை காலண்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதமாக இருந்த நிலையில், அக்டோபர் 1-ம் தேதி முதல் 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால் தினசரி காலண் டர்களின் விலை 35-லிருந்து 40 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது என்று கூறினார்.