கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் ஆய்வு பணி மேற்கொள்வதற்காக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்றார். அப்போது அணைக்கரை பாலத்தினை அமைச்சர் கடந்து செல்வதற்காக எதிரே வந்த ஆம்புல்ன்ஸை பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் நிறுத்தி வைத்திருந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வந்ததை தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமானது. இதையடுத்து மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிக்கப்பட்டது. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டது. மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் கல்லணைக்கு சென்று சேர்ந்த பிறகு கல்லணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டது.
கல்லணையிலிருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. குறிப்பாக கடலில் கலப்பதற்காக கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. கொள்ளிடத்தில் கரைபுரண்ட ஓடிய தண்ணீர் பாபநாசம் அருகே உள்ள சில கிராமங்களுக்குள் புகுந்து மக்கள் சிரமத்திற்கு ஆளாகினார்கள். கொள்ளிடம் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
ஆற்றின் கரைகள் உடைந்தாலோ அல்லது கிராமங்களுக்குள் வெள்ளம் வந்தாலோ மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 5ம் தேதி கொள்ளிடம் கரையோரத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார்.
கும்பகோணம் அருகே உள்ள அணைக்கரையில் உள்ள சுற்றுலா மாளிகையிலிருந்து அணைக்கரை பாலத்தின் வழியாக ஆய்வுக்கு சென்ற போது அமைச்சரின் காருக்காக எதிர் கரையில் வந்த ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. அது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அமைச்சர் செல்வதற்காக ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது என எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வீடியோவை பரப்பத் தொடங்கினர். எனினும் அது ஒரு வழிப்பாதை என்பதால் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டதே தவிர அமைச்சருக்காக இல்லை என தி.மு.கவினர் பேசினர். இதனால் சலசலப்பு ஏற்ப்பட்டது.
இது குறித்து விவரம் அறிந்த சிலரிடம் பேசினோம், `தஞ்சாவூர் மாவட்டத்தையும் அரியலூர் மாவட்டத்தையும் இணைக்க கூடிய அணைக்கரை பாலத்தில் கரையின் இரு பகுதிகளிலும் சோதனை சாவடி அமைக்கப்பட்டு போலீஸார் தொடர் பணியில் ஈடுப்பட்டு வருவது வழக்கம். பழமையான பாலம் என்பதால் கனரக வாகனக்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கார் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் அதிக அளவிலான வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருப்பதால் ஒருவழிப்பாதையாக பாலத்தில் போக்குவரத்தை போலீஸார் ஒழுங்குப்படுத்தி வருகின்றனர். பாலத்தின் ஒரு கரையில் வாகனங்கள் உள்ளே சென்றால் மற்றொரு கரையில் நிறுத்தப்படும். குறிப்பிட்ட அளவு வாகனங்கள் சென்ற பிறகே அடுத்த கரையில் நிற்கும் வாகனங்களை அனுமதிப்பர். இந்த நடைமுறை வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் ஆய்வு மேற்கொள்ள வந்த அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி சுற்றுலா மாளிகையிலிருந்து பாலத்தின் வழியாக புறப்பட்டார். அப்போது எதிர் திசையிலிருந்து சென்ற ஆம்புலன்ஸை பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸ் நிறுத்தினார். அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர், தி.மு.க நிர்வாகிகள் என 15க்கும் மேற்பட்ட கார்கள் சென்ற பிறகே ஆம்புலன்ஸ் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது. ஐந்து நிமிடங்கள் வரை சிகிச்சைக்கு சென்றவருடன் சைரன் ஒலித்தப்படி ஆம்புல்ன்ஸ் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆம்புலன்ஸ் நிற்பது தெரிந்தும் காரை நிறுத்தி பின்னே சென்று வழி கொடுக்காமல் தொடர்ந்து சென்றதாலேயே ஆம்புலன்ஸ் நிறுத்தப்படுவதற்கான சூழல் ஏற்பட்டதாக எதிர்கட்சியினர் புகார் கூறி வருகின்றனர். ” எனத் தெரிவித்தனர்.
தி.மு.க தரப்பை சேர்ந்த சிலரிடம் பேசினோம், “சுற்றுலா மாளிகையிலிருந்து போலீஸாருக்கு தகவல் கொடுத்த பிறகே அமைச்சர் கிளம்பினார். பாலத்தில் பாதிக்கு மேல் சென்று விட்ட நிலையில் ஆம்புலன்ஸ் வந்தது. ஒரு வழிப்பாதை நடைமுறை பின்பற்றப்படுவதால் திரும்பி செல்வதற்கும் வாய்பில்லை. சில நொடிகளில் அமைச்சரின் கார் கடந்து சென்று விட்டது. அதன் பிறகு ஆம்புலன்ஸ் சென்றது. யார் சென்றிருந்தாலும் இப்படிதான் நடந்திருக்கும். ஆனால் சிலர் திட்டமிட்டு இதனை வேண்டும் என்றே தவறாக பரப்பி வருகின்றனர்” என்றார்.