புதுடெல்லி: ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழக்கமிட்ட ‘படாங்’ மைதானம், சிங்கப்பூரின் பாரம்பரிய நினைவு சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் நேற்று தனது 57வது தேசிய தினத்தை கொண்டாடியது. 1943ம் ஆண்டு இந்த மைதானத்தில் இருந்துதான் ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முழங்கினார். பல்வேறு பெருமைகளை கொண்ட இந்த படாங் மைதானத்தை, சிங்கப்பூர் தனது 57வது தேசிய தினத்தில் 75வது தேசிய பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டு தேசிய பாரம்பரிய வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சிங்கப்பூரில் உள்ள இந்திய சமூகத்தினருக்கும் படாங்கிற்கும் சிறப்பு முக்கியத்துவம் உண்டு. ஆங்கிலேயர்கள் புறக்காவல் நிலையத்தை நிறுவியபோது இந்திய சிப்பாய்கள் முதன் முதலில் தங்கள் முகாம்களை நிறுவியது இங்குதான். பல்லாயிரக்கணக்கான ஐஎன்ஏ வீரர்கள், உள்ளூர் இந்திய மக்களுக்கு நேதாஜி பல உரைகளை ஆற்றிய இடம் இதுவாகும். இங்குதான் அவர் டெல்லி சலோ முழக்கத்தை முழங்கினார். ராணி ஜான்சி படைப்பிரிவை நிறுவினார். மேலும், இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுவிக்க இந்திய வளங்களை ஒட்டுமொத்தமாக திரட்ட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். போர் முடிவதற்கு சற்று முன்பு போஸ் படாங்கின் தெற்கு விளிம்பில் ஐஎன்ஏ நினைவகத்தை நிறுவினார்,’ என்று கூறப்பட்டுள்ளது.