ஈரோடு: திமுக அரசுடன் ஆன்லைன் சூதாட்டம் நடத்துவோர் கைகோர்த்துள்ளனர். அதனால், சூதாட்டத்துக்கு தடை சட்டம் கொண்டு வராமல், கருத்து கேட்டு காலம் கடத்துகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அதிமுக சார்பில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான பழனிசாமி பேசியதாவது:
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அவிநாசி-அத்திக்கடவு திட்டம் இதுவரை நிறைவடையவில்லை. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால், தற்போது பவானிசாகர் உபரிநீர் அனைத்து ஏரிகளுக்கும் நிரப்பப்பட்டு இருக்கும். இத்திட்டம் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
தமிழகத்தில் கஞ்சா, போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்து, மாணவர்கள்கூட போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டனர்.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அதிமுக ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதனால், அதை எதிர்த்து நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை சரியாக கையாளாததால், நீதிமன்றம் புதிய சட்டம் கொண்டு வர அறிவுறுத்தியுள்ளது.
ஆன்லைன் ரம்மியால் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இதுவரை தடை சட்டம் நிறைவேற்றவில்லை. ஆன்லைன் ரம்மி தடை குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் நடத்துவதாகக் கூறுகின்றனர். சூதாட்டத்தை தடை செய்ய யாராவது கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவார்களா?
ஆன்லைன் நிறுவனங்கள் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி சம்பாதிக்கின்றனர். திமுக அரசுடன் ஆன்லைன் ரம்மி நடத்துவோர் கைகோர்த்துள்ளனர். அதனால், இதுவரை தடை சட்டம் கொண்டு வரவில்லை.
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 2 லட்சம் மூட்டைநெல் மழையில் நனைந்து வீணாகிஉள்ளது. அந்த நெல்லை அரைத்தால் கெட்ட வாசம் வரும்.
அதனை ரேஷனில் வழங்கினால், மக்கள் எப்படி சாப்பிட முடியும்? கொள்முதல் செய்த நெல்லை அரைத்த 92 ஆயிரம் கிலோ அரிசி சாப்பிட தகுதியற்றது என மத்திய குழு தெரிவித்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், கே.வி.ராமலிங்கம், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.