தேரழுந்தூர் வேதபுரி ஈசுவரரும் ஆமருவிப் பெருமாளாம் விஷ்ணுவும் சதுரங்கம் விளையாடி சர்ச்சை உருவாக்கி இன்றும் இணைந்து வாழும் தலம் தேரழுந்தூர் என்பதும் அதிசயமான தகவல்!
கேரள மாநிலம் அம்பலப்புழைப் பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்த அரசன் சதுரங்க விளையாட்டில் தேர்ச்சி பெற்றவன். அவன் தன்னிடம் தோற்பவர்களை எல்லாம் கடுமையாகத் தண்டித்தும் வந்தான். இவனிடம் தோற்ற பலரும் அவமானம் அடைந்து கண்ணனைப் பிரார்த்தித்தார்கள். கண்ணனும் முதியவர் வடிவில் வந்து அந்த மன்னனிடம் சதுரங்கம் ஆட முன் வந்தார். தான் போட்டியில் வெற்றி பெற்றால் சதுரங்கக் கட்டம் ஒன்றில் இரண்டு நெல்லும், அடுத்த கட்டத்தில் 4 நெல்லும், அடுத்த கட்டத்தில் 8 நெல்லும் எனப் பெருக்கல் எண்ணிக்கையில் வைத்து கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை வைத்தார். மன்னனும் அலட்சியமாக ஒப்புக் கொண்டான்.
ஆட்டம் தொடங்கி, இறுதியில் மன்னன் தோற்றான். கண்ணன் வென்றான். முதியவர் கேட்டபடி நெல்லை வைக்க ஆரம்பித்ததும் தான் அரசனுக்கு தவறு புரிந்தது. 20-வது கட்டம் வரும்போது நெல்லின் எண்ணிக்கை அளவு 10 லட்சமாக மாறியது. நாட்டில் இருந்த அத்தனை நெல்லையும் வைத்தாலும் முதியவரின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என்பதை அரசன் உணர்ந்தான். அதாவது சதுரங்கத்தின் 64 கட்டங்களை நிரப்ப (2 ^ 64) = 18.446.744.073.709.551.615 நெல் தேவைப்படும். அதாவது டிரில்லியன் டன் கணக்கில் நெல் தேவைப்படும். இதனால் அரசன் கலங்கித் தவித்தான். அவன் தோல்வியை ஒப்புக் கொண்டதும் கண்ணன் விஸ்வரூப வடிவம் காட்டி, ‘என் பக்தர்களை இம்சித்ததால் இந்த விளையாட்டை நிகழ்த்தினேன். வருந்த வேண்டாம்! எனக்குத் தரவேண்டிய நெல்லை உடனே கொடுக்க வேண்டாம். இந்த கடன் தீரும்வரை அம்பலப்புழை கண்ணன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அரிசியில் செய்யப்பட்ட பாயாசத்தை நிவேதனமாகக் கொடு’ என்று கூறினார். அரசனும் அவ்வாறே ஒப்புக்கொண்டு செய்துவந்தான். இன்றும் இந்த கோயிலில் அரசி பாயாசம் நிவேதனமாக அளிப்பது கண்ணன் ஆடிய சதுரங்க விளையாட்டால்தான் என்று ஒரு கதை அங்கு சொல்லப்படுகிறது.
அம்பலப்புழாவில் மட்டுமல்ல, தமிழகத்தின் சோழ வள தேசத்தில் மாயவரத்துக்கு அருகே உள்ள தேரெழுந்தூரிலும் ஒரு லீலை சதுரங்கத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்தது. கம்பன் பிறந்த தலம், காவிரி தங்கும் தலம், அம்பிகை விலகிய தலம், மார்க்கண்டேயர் சாயுஜ்ஜியப் பதவி பெற்ற தலம், பிரகலாதன் திருமாலின் மடியில் அமர்ந்த தலம், கும்பமுனி சாபம் தீர்த்த தலம் என பல பெருமைகள் இந்த இடத்துக்கு உண்டு. இங்கேதான் ஈசனாம் வேதபுரீஸ்வரரும் ஆமருவியப்பன் எனும் திருமாலும் சதுரங்கம் (சொக்கட்டான் என்றும் சொல்வது உண்டு) ஆடிய தலம் எனப்படுகிறது. விளையாட்டாக மாமனும் மைத்துனனும் சதுரங்கம் ஆடும்போது வெற்றி தோல்வியை நிர்ணயிக்க பார்வதியை நடுவராக இருக்கவேண்டினார்கள்.
பார்வதி நடுவராக இருக்க அந்த போட்டியில் விஷ்ணு வெற்றிபெற்றார். இதனால் ஈசனுக்கும் விஷ்ணுவுக்கும் சச்சரவு எழ. விஷ்ணுவே வெற்றிபெற்றார் என்று தீர்ப்புக் கூறிய பார்வதியோடு ஈசன் கோபம் கொண்டு பல நாட்கள் பிரிந்து வாழ்ந்தாராம். இன்றும் இந்த ஊர் சிவாலயத்தில் அம்பிகை சந்நிதி சற்று தள்ளியே உள்ளது. தேரழுந்தூர் வேதபுரி ஈசுவரரும் ஆமருவிப் பெருமாளாம் விஷ்ணுவும் சதுரங்கம் விளையாடி சர்ச்சை உருவாக்கி இன்றும் இணைந்து வாழும் தலம் தேரழுந்தூர் என்பதும் அதிசயமான தகவல் எனலாம்.
அதைப்போலவே திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியிலிருந்து நீடாமங்கலம் செல்லும் சாலையில், அமைத்துள்ளது திருப்பூவனுார். இந்த பகுதியில் தான் பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசிய, சுமார் 1500 ஆண்டுகள் பழமையான “சதுரங்க வல்லப நாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள இறைவன் தொடக்கத்தில் `புஷ்பவனநாதர்’ என்று அழைக்கப்பட்டு, பிறகு சதுரங்க வல்லபநாதராகப் பெயர் பெற்று மக்களுக்குச் காட்சியளிக்கிறார். மேலும், தாய் கற்பகவல்லியும் மைசூருக்குப் அடுத்து, இறைவி இங்கு சாமூண்டீஸ்வரியாக திருக்காட்சியளித்து தனிச் சன்னதியில் கோவில் கொண்டிருக்கிறாள். இத்திருத்தலத்தில் உள்ள இறைவன் சதுரங்க வல்லபநாதர் என்று அழைக்கப்படுவதற்கான காரணத்தை தல புராணம் நமக்கு கூறுகிறது.
இங்கு அரசு புரிந்த வசுசேன மன்னனுக்கும் அவரது துணைவியார் காந்திமதிக்கும் பிறந்தவள் அன்னை சக்தியின் அம்சமான ராஜ ராஜேஸ்வரி. ராஜேஸ்வரியை தனக்கு மணம் முடித்து வைக்க வயோதிகர் வடிவம் கொண்டு வந்த ஈசன், இங்குதான் சதுரங்கம் ஆடி வெற்றி பெற்று மணம் முடித்தார் என வரலாறு கூறுகின்றது. ராஜேஸ்வரியின் வளர்ப்புத் தாயான சாமுண்டீஸ்வரிக்கும், இந்த திருத்தலத்தில் சந்நிதி அமைக்கப்பட்டு உள்ளது. திருநாவுக்கரசர் இத்திருத்தலம் வந்து தங்கி, இங்கு அமைந்திருக்கும் சதுரங்க நாதர் பற்றி, “பூவனூர் புகுவார் வினைப் புகுமே” என்று தனது பாடல் குறிப்பில் கூறியுள்ளார். சதுரங்க விளையாட்டை விளையாடக்கூடியவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்தால் சதுரங்க விளையாட்டில் சிறந்து விளங்கலாம் என்பதும், மேலும்
பௌர்ணமி, அம்மாவசை போன்ற காலங்களில் இந்த கோயிலில் நடைபெறும் சிறப்புப் பூஜைகள் மற்றும் அபிஷேகங்களில் கலந்துகொண்டு தரிசனம் செய்யும்போது குடும்ப சிக்கல்கள், தோஷங்கள்,தொழில் பிரச்னைகள் நீங்கி சிறப்பாக வாழலாம் என்பது இறைநம்பிக்கையாகும். இப்படிப்பட்ட சிறப்புகள் கொண்ட கோயிலைப் பற்றி பிரதமர் பேசிய பிறகே பலரது கவனத்தை பெற்றுள்ளது என்பதும் சிறப்பானது.
இப்போது மாமல்லபுரத்தில் உலக ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறும் வேளையில் பல பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நம் புராணத்தில் நடைபெற்றுள்ள இந்த சதுரங்க விளையாட்டுகள் குறித்த தகவல்கள் வியப்பை உண்டாக்குகிறது அல்லவா!