”தியாகங்களுக்கு பதில் கோரத்தை நினைவுகூர்வது சரியா?”..நிதியமைச்சருக்கு சு.வெங்கடேசன் கேள்வி

‘நிதி சேவைத்துறையின் பிரிவினை கோரங்களின் நினைவு நாள்’ என்கிற ஆணை ஒற்றுமை என்ற செய்தியை சொல்லுமா? மாறாக கோரம் என்பதை மனதில் நிறுத்துமா? என்ற கேள்வி எழுகிறது என நிதியமைச்சருக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

அரசு வங்கிகள் ஆகஸ்ட் 14ஆம் தேதியை பிரிவினை கோரங்களின் நினைவு நாளாக அனுசரிக்க உள்ளதாக ஊடகங்கள் வழியாக செய்தி பரவுகின்றன. இதற்கான கண்காட்சிகளை அவை நடத்தப் போவதாகவும், அதற்கான உள்ளடக்கத்தை கலாச்சார அமைச்சகத்தின் ஆலோசனையோடு, நிதி சேவை துறை தரப்போவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. சுதந்திர நாளின் 76வது ஆண்டு நிறைவை கொண்டாடப் போகிறோம். விடுதலை வேள்வியில் மதம், சாதிகளுக்கு அப்பாற்பட்டு ரத்தம் சொரிந்த, இன்னுயிரை ஈந்த தியாகிகளின் நினைவைப் போற்ற வேண்டிய பெருமைமிகு தருணம்.

தாய் நாட்டின் அடிமைத்தளை அறுத்தெறிய இம்மண்ணில் வீழ்ந்த இளம் உயிர்களை நாம் மறக்க இயலுமா? குதிராம் போஸ், பகத் சிங், அசபுல்லாகான், திருப்பூர் குமரன் ஆகியோர் மிக மிக இளம் வயதில் உயிரையே அர்ப்பணித்தவர்கள். உருதுக் கவிஞரான அசபுல்லாகான் 27 வயதில் மரண தண்டனையை தழுவியவர். இளம் தீரர்களை நினைவு கூர்வதற்கும் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் உரமான அவர்களின் தடங்களைப் போற்றுவதற்குமான நேரம் இது.

image
நிதிச் சேவைத் துறையின் “பிரிவினை கோரங்களின் நினைவு நாள்” என்கிற ஆணை ஒற்றுமை என்ற செய்தியை சொல்லுமா? மாறாக கோரம் என்பதை மனதில் நிறுத்துமா? என்ற கேள்வி எழுகிறது. வரலாற்று நிகழ்வுகளை ஆய்வு செய்வதை நான் மறுதலிக்கவில்லை. ஆனால் அது தெளிந்த கண்ணோட்டத்தை, விடுதலை இயக்கத்தின் மெய்யான பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்வதாக உள்ளதா? என்பதே கேள்வி.

அதற்கான உள்ளடக்கம் நிதிச் சேவைத் துறையால் தரப்படுமா? பிரிவினை நோக்கி இட்டுச் சென்ற நிகழ்வுகள் பற்றிய அறிவியல் பூர்வமான, பகுத்தாய்வு ரீதியான சித்தரிப்பாக இருக்குமா? என்பதே. விடுதலை இந்தியாவின் கனவை உருவாக்கிய தியாகிகளின் உணர்வும் விழைவும் எதிர்கால தலைமுறைக்கு வழுவாமல் எடுத்துச் செல்லப்பட வேண்டுமெனில் மதங்கள் கடந்த மகத்தான மனிதர்களின் தியாகங்கள் பகிரப்பட வேண்டும்.

கோரம் முன்னிறுத்தப்படுவது ஒரு வகையில் “ஒற்றுமையை பாதிக்கிற” உள்ளடக்கம் கொண்டதாக அமைய வாய்ப்புள்ளது. அது விடுதலையின் கனவுக்கு செய்யப்படும் நீதியாக இருக்காது. எனவே சுதந்திர நாளின் செய்தி சமூக அடையாளங்கள் கடந்த தியாகங்களின் நினைவு நாள் என்ற வகையில் எடுத்து செல்லப்பட ஆவன செய்யுமாறு வேண்டுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

இதையும் படிக்க: ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ – மீண்டும் பொதுமக்களை அச்சுறுத்தும் பாகுபலி காட்டுயானைSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.