சுந்திர இந்தியாவில் அசைக்க முடியாது இடத்தில் இருந்த
காங்கிரஸ்
கட்சி இன்றைக்கு வலுவிழந்து உள்ளது. அந்த இடத்தில் அமர்ந்துள்ள பாஜக அசைக்க முடியாத சக்தியாக விளங்குகிறது. கடைசியாக காங்கிரஸ் கட்சி 10 அண்டுகாலம் ஆட்சியில் இருந்தது. அந்த வரிசையில், பாஜகவும் 10 ஆண்டுகளை விரைவில் நிறைவு செய்யவுள்ளது. ஆனாலும், 2024இல் மீண்டும் மோடி தலைமையிலான பாஜக அரசு அமையும் என்று அமித் ஷா உறுதிபட தெரிவித்துள்ளார். அவரது பேச்சை அவ்வளவு எளிதில் கடந்து விட முடியாது. ஏனெனில், பாஜக அவ்வளவு வலுவாகவும், அதனை எதிர்க்கும் கட்சிகள் வலுவிழந்தும் உள்ளன.
இந்த சூழலில் பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைத்து பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இதற்கான முயற்சிகள் அவ்வப்போது எடுக்கப்பட்டும் வருகின்றன. ஆனால், தேசம் முழுவதும் பரந்துபட்டு கிடக்கும் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமையும் பட்சத்தில் அது பாஜகவுக்கு சாதகமாகவே அமையும் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைய வேண்டும் என்ற ஒரு கோரிக்கை வலுத்து வருகிறது. அப்போதுதான் பாஜகவை எதிர்த்து வலுவான அரசியல் செய்ய முடியும் என்பது 100 ஆண்டு பழமைவாய்ந்த அக்கட்சியின் பார்வையாக இருப்பதாக தெரிகிறது.
பிளவுபட்ட கம்யூனிஸ்ட்டுகள்
இந்தியாவுக்கு 1947ஆம் ஆண்டில் சுதந்திரம் கிடைத்தது. அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு சோஷலிஸ்ட்டாகக் கருதப்பட்டார். காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு எதிராகப் போராட வேண்டாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு சோவியத் யூனியன் அறிவுறுத்தியது. இதற்குள்ளாக மாவோ தலைமையில் நடந்த கம்யூனிஸ்ட் புரட்சி சீனாவில் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. அதன் காரணமாக ஏற்பட்ட குழப்பத்தினால், ஆரம்ப கட்ட பிளவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சி உருவானது. அதன்பிறகு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியில் இருந்து பிரிந்து மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் கட்சிகள் உருவாகின.
கம்யூனிஸ்ட்டுகள் ஒன்றிணைய வேண்டும் என்று இதற்கு முன்பும் இதுபோன்ற கோரிக்கைகள் எழுந்து அவை புஸ்வானமாக போயுள்ளன. ஆனால், இன்றைக்கிருக்கும் அரசியல் சூழலில், பாஜகவை எதிர்க்க வேண்டுமானால், கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமல்ல, அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து தாய் கழகம் திரும்ப வேண்டும் என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது. அப்படி இணைந்தால், அதன் ஆணி வேர் காங்கிரஸ் நோக்கி செல்லும்.
இந்திய அரசியல் கட்சிகள் ஒரு பார்வை
நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய, மிகப் பழமையான கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் நீண்ட வரலாறு கொண்டது. ஆனால், கருத்து வேறுபாடுகள், சித்தாந்த வேறுபாடுகள் காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து இதுவரை சுமார் 60க்கும் மேற்பட்ட கட்சிகள் பிரிந்துள்ளன. இன்னும் சொல்லப்போனால், பாஜகவே காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்ததுதான்.
விடுதலை பெறும் குறிக்கோளுடன் இந்திய தேசிய காங்கிரஸ் எனும் இயக்கம் தொடங்கப்படவில்லை என்றாலும், பின் நாட்களில் அந்த அமைப்பில் இணைந்து பலரும் சுதந்திரத்திற்காக போராடினர். காங்கிரஸ் என்பதன் அர்த்தமே மாநாடுதான். இந்த அமைப்பில் பல்வேறு சித்தாந்தங்களை கொண்ட தலைவர்கள் தொடக்கம் முதலேயே இருந்தனர். அகிம்சை, போராட்டக்குணம், வலதுசாரி, இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் பலர் இருந்தனர். சுதந்திரத்துக்கு முன்பே முழுமையான அரசியல் இயக்கமாக மாறியிருந்த காங்கிரஸ், சுதந்திரத்துக்கு பின்னர் நேரு தலைமையில், அரசியல் கட்சியாக உருவெடுத்தது. அந்த சமயத்தில் காங்கிரஸுக்கு மாற்றாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே இருந்தது.
ஜனசங்கம் தோற்றம்
ஜெயபிரகாஷ் நாராயண் உள்ளிட்ட காங்கிரஸுக்குள் இருந்த சோஷலிஸ்ட்டுகள் தனி அரசியல் அமைப்பாக உருவெடுத்தனர். அதேபோல், காங்கிரஸில் இருந்த வலதுசாரி சிந்தனையாளர்களை ஒருங்கிணந்து சியாம பிரசாத் முகர்ஜி ஜனசங்கத்தை உருவாக்கினார். அடுத்தடுத்த ஆண்டுகளில் காங்கிரஸில் இருந்து பிரிந்த வெவ்வேறு சிந்தனைகளைக் கொண்ட இயக்கங்கள் தனி அரசியல் இயக்கமாக வளரத் தொடங்கின. ஆனாலும், நேரு மறைவு வரை காங்கிரஸ் கட்சி கையே ஓங்கியிருந்தது. அவரது மறைவுக்கு பின்னர் இந்திரா காந்தி காலத்திலும், ராஜீவ் காந்தி காலத்திலும் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதனிடையே, தமிழகத்தில் திமுக உள்பட சில மாநிலங்களில் அந்தந்த மாநிலக் கட்சிகள் வலுப்பெறத் தொடங்கியிருந்தன.
ஒருகட்டத்தில், ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியே பிளவுபட்டு பின்னர் ஒன்றிணைந்தது. ராஜீவ் காந்தி ஆட்சிகாலத்தில், காங்கிரஸில் இருந்து வெளியேறிய வி.பி.சிங் மீண்டும் ஜனதா கட்சிகளை ஒருங்கிணைத்து ஜனதா தளத்தை உருவாக்கினார். இதில், ஜனசங்கம் இணைந்தது. வி.பி.சிங் பிரதமரானார்.
பல கட்சிகளாக உடைந்த காங்கிரஸ், ஜனதாதளம்
வெவ்வேறு சிந்தனை கொண்ட தலைவர்கள் ஓரணியில் தொடர முடியாது என்பதற்கு ஏற்ப, ஜனதா கட்சியில் ஐக்கியமாகிய ஜனசங்கம் உடைந்து, வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்கள் 1980இல் பாஜகவை தொடங்கினர். ஆனாலும், பாஜக, இடதுசாரிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்ததால், வி.பி.சிங் அரசு தொடர்ந்தது. இருந்தாலும், நீண்ட நாட்களுக்கு அது நீடிக்கவில்லை. ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் சந்திரசேகருக்கு ஆதரவளித்ததால் அவர் பிரதமரானார்.
அதன் தொடர்ச்சியாக, ஜனதா தளம் உடைந்தது. அதிலிருந்து பல கட்சிகள் உருவாகின. ராஷ்டிரிய ஜனதாதளம், மதச்சார்பற்ற ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம் என்பன உள்ளிட்ட பல மாநிலக் கட்சிகளாக இருக்கின்றன. அதேபோல், காங்கிரஸ் கட்சியும் பல துண்டுகளாக உடைந்தது. சரத்பவார் தொடங்கிய தேசியவாத காங்கிரஸ், விதர்பா ஜனதா காங்கிரஸ், மம்தா பானர்ஜி தொடங்கிய அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ், ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கிய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் என பல கட்சிகள் காங்கிரஸில் இருந்து பிரிந்ததுதான். 1996இல் ஜி.கே.மூப்பனார் பிரிந்து தமிழ் மாநிலக் காங்கிரஸும், அதில் இருந்து 2001ஆம் ஆண்டி ப.சிதம்பரம் பிரிந்து காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையும் தொடங்கினர்.
பாஜகவை வீழ்த்த 1996 ஃபார்முலா?
தற்போதைய சூழலில், இந்திய தேசிய காங்கிரஸில் இருந்து பிரிந்த பெரும்பாலான கட்சிகள் கலைக்கப்பட்டு அதன் தலைவர்கள் மீண்டும் காங்கிரஸில் இணைந்து விட்டனர். சிலர் பாஜகவில் இணைந்து விட்டனர். சிலர், ஜனதாதளத்தில் இருந்து பிரிந்த கட்சிகளில் இணைந்து விட்டனர். இவற்றில் சில செயல்படாதவையாக மாறி விட்டன. எஞ்சியவை மாநிலக் கட்சிகளாக தொடர்ந்தாலும், எதுவும் தேசிய கட்சியாக இல்லை. தேசியக் கட்சியாக இருப்பது பாஜகவும், காங்கிரஸும் மட்டுமே.
எனவே, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமையும் பட்சத்தில் அது பாஜகவுக்கு சாதகமாகவே அமையும் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதனால், தேசிய அரசியலில் காங்கிரஸ் கட்சி தவிர்க்க முடியாத ஒன்று.
1996ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், பாஜக வெற்றி பெற்று வாஜ்பாய் 13 நாட்களே பிரதமர் ஆக இருந்தாலும். ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாததால் அவரது ஆட்சி கவிழ்ந்தது. இரண்டாவது இடத்தில் பெரும்பான்மையை பெற்று இருந்த ஜனதா தளம் கட்சி ஆட்சி அமைக்க அக்கட்சி தலைமையில் ஐக்கிய முன்னணி என்ற கூட்டணி உருவாக்கப்பட்டது. அக்கூட்டணியில் பல மாநிலங்களில் வெற்றி பெற்ற கட்சிகள் இணைந்து ஆதரவளித்தது. காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை வெளியில் இருந்து ஆதரவளித்தன. ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தேவ கவுடா பிரதமரானார்.
இதுபோன்று ஓரணியில் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரண்டால், 2024 தேர்தலில் பாஜகவுக்கு நிச்சயமாக நெருக்கடி கொடுக்க முடியும். பாஜகவை ஆட்சிக்கட்டிலில் இருந்து இறக்க இந்த யுக்தி பயன்பட வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் அவர்கள் ஒற்றுமையாக செயல்படாவிட்டால், 1996 முதல் 1998ஆம் ஆண்டுகள் இடையே இரு ஐக்கிய முன்னணி அரசுகள் அமைந்தும் அவை கவிழந்த நிலையே ஏற்பட வாய்ப்புண்டு.