பிஹாரில் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகும் நிதிஷ்

புதுடெல்லி: பிஹாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) நீண்ட காலமாக ஐக்கிய ஜனதா தளக் கட்சி (ஜேடியு) இடம்பெற்றுள்ளது. கடந்த 2014 மக்களவை தேர்தலில் என்டிஏ-வின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதை எதிர்த்து கூட்டணியில் இருந்து ஜேடியு வெளியேறியது. அடுத்து வந்த சட்டப்பேரவை தேர்தலில் லாலுவின் ஆர்ஜேடியுடன் இணைந்து போட்டியிட்டது.

இதில் பெற்ற வெற்றியால் மீண்டும் பிஹார் முதல்வரானார் நிதிஷ்குமார். இடையில், மெகா கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ் மீண்டும் பாஜகவுடன் இணைந்து முதல்வரானார். அதன்பின் வந்த சட்டப்பேரவை தேர்தலிலும் என்டிஏ கூட்டணியில் இருந்து முதல்வரானார். அப்போது முதல் பாஜகவுடன் தொடர்ந்து ஜேடியுவுக்கு மோதல் நீடிக்கிறது. இதன் உச்சமாக ஜேடியுவிலும் பிளவை ஏற்படுத்த பாஜக முயல்வதாகவும், அதற்காக ஜேடியு முன்னாள் தேசிய தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆர்.சி.பி.சிங்கை பாஜக வளைப்பதாக ஜேடியு கட்சியினர் சந்தேகிக்கின்றனர்.

இந்த சூழலில், ஜேடியு சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த ஆர்.சி.பி.சிங்கின் பதவிக் காலம் முடிந்தது. ஆனால், அவருக்கு முதல்வர் நிதிஷ்குமார் மறுவாய்ப்பு வழங்கவில்லை. தவிர கட்சி சார்பில் நோட்டீஸும் அனுப்பப்பட்டது. இந்த நடவடிக் கைகளால் ஆர்.சி.பி.சிங் சில நாட்களுக்கு முன்னர் ஜேடியுவில் இருந்து விலகினார்.

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தையும் நிதிஷ் குமார் புறக்கணித்தார். ஆனால், பிஹார் மெகா கூட்டணியில் இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் போனில் பேசியதாக தகவல் வெளியானது. ஆளும் ஜேடியு -பாஜக இடையே விரிசல் அதிகரித்த சூழ்நிலையில், இரு கட்சியினரும் பாட்னாவில் நேற்று முன்தினம் எம்எல்ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி விரிவாக ஆலோசனை நடத்தினர்.

அப்போது, அடுத்த 48 மணிநேரத்தில் ஆட்சி மாற்றம் வரலாம் என்ற அளவுக்கு பேசியதாக கூறப்படுகிறது. இப்பிரச்சினையில் தீர்வு காண பிஹார் துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத் தலைமையில் பாஜக பிரதிநிதிகள், முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்து பேச உள்ளனர். இதுகுறித்து ஜேடியு தலைவர் லல்லன்சிங் கூறும்போது, ‘கடந்த 2019-ல் ஆட்சி அமைந்த போது, மத்திய அமைச்சரவையில் சேர தேவையில்லை என்று எடுத்த முடிவு தொடர்கிறது. ஆர்.சி.பி.சிங் தானாக விரும்பி அமைச்சரவையில் இணைந்தார். சட்டப்பேரவை தேர்தலில் நாம் 3-வது இடத்தை பெற, சிராக் பஸ்வானை தனித்து போட்டியிட வைத்த சதியை நேரம் வரும் போது வெளியிடுவோம். அடுத்து 2024 மக்களவை தேர்தல் வரும் போது எந்த கூட்டணி என்பதை முடிவு செய்வோம்’’ என்று தெரிவித்தார். பிஹாரின் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் எம்எல்ஏ.க்கள் கூட்டத்தை கூட்டியுள்ளனர்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் அதிக 80 எம்எல்ஏ.க்களை பெற்றும் லாலுவின் ஆர்ஜேடி.யால் ஆட்சி அமைக்க முடியவில்லை. 2-வது இடத்தில் 77 தொகுதிகளை பெற்ற பாஜக, தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி ஜேடியு தலைவர் நிதிஷ்குமாரையே முதல்வராக்கியது.

ஜேடியு 45, காங்கிரஸ் 19, சிபிஐ (எம்எல்) 12 மற்றும் இதர தொகுதிகளை சிறிய கட்சிகள் பெற்றன. தற்போது, மோதல் அதிகரித்திருப்பதால், எந்த நேரத்திலும் பாஜக – ஜேடியு கூட்டணி உடைந்து, மீண்டும் ஆர்ஜேடி – ஜேடியு – காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மெகா கூட்டணி ஆட்சி அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.