புதுடெல்லி: ஆன்மிக குரு தேவகிநந்தன் தாகுர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “அதிக அளவிலான மக்கள் தொகைதான் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம். எனவே, பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
குறிப்பாக, அரசியலமைப்பு சட்டத்தின் 21ஏ பிரிவானது, அனைவருக்கும் சுத்தமான காற்று, குடிநீர், சுகாதார வசதி, வாழ்வாதாரம் ஆகியவை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என கூறுகிறது. ஆனால் மக்கள் தொகையை கட்டுப்படுத்தவில்லை என்றால், இத்தகைய உரிமையை உறுதி செய்ய முடியாது. எனவே வெளிநாடுகளில் உள்ள மக்கள் தொகை கொள்கைகளை ஆராய்ந்து, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த சட்டம் இயற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய மத்திய சட்ட ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் அப்துல் நசீர் மற்றும் ஜே.கே.மகேஷ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இதுதொடர்பாக ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்களுடன் இந்த மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.