கும்மிடிப்பூண்டி அருகே தனியாக இருந்த மூதாட்டியின் வீட்டில் புகுந்து திருட முயன்ற வடமாநிலத்தவரை பொதுமக்கள் பிடித்து அடித்ததில் அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கெட்டனமல்லி பகுதியில் வசிப்பவர் மூதாட்டி வடுவம்மாள் (80). இவரது வீட்டில் திருடுவதற்காக நேற்று நள்ளிரவில் 3 வடமாநிலத்தவர் நுழைந்துள்ளனர். அப்போது, சத்தம் கேட்டு எழுந்த மூதாட்டி கூச்சலிடவே இருவர் தப்பியோடிய நிலையில், அருகில் இருந்தவர்கள் ஒருவரை மடக்கிப் பிடித்தனர்.
இந்த நிலையில் பிடிப்பட்ட அந்த நபரை பொதுமக்கள் அடித்து உதைத்ததில் காயமடைந்தார். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற கவரைப்பேட்டை காவல் துறையினர், அந்த வடமாநிலத்தவரை மீட்டு சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து உடற்கூறு ஆய்வுக்காக சடலத்தை அங்கேயே வைத்துள்ளனர். இதனிடையே தப்பிச் சென்ற வடமாநிலத்தவர் குறித்து கவரைப்பேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த நபர் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM