மும்பை: மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்எல்ஏக்கள் சிலர் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கினர். இதனால், கடந்த ஜூன் மாதம் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இதை தொடர்ந்து சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களுடன் பாஜ கூட்டணி ஆட்சி அமைத்தது. ஜூன் 30ம் தேதி ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும் பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர். கிட்டத்தட்ட 40 நாட்களாகியும் அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. இதை சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெறும் என்று மாநில பாஜ மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். யார்,யார் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்பது குறித்து விவரம் வெளியாகவில்லை. இதில் பட்னாவிசுக்கு உள்துறை பொறுப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.