CWG நிறைவு | கடைசி நாளில் 4 தங்கம் வென்றது இந்தியா: 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலத்துடன் பதக்கப் பட்டியலில் 4-வது இடம்

பர்மிங்ஹாம்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் நேற்று ஒரே நாளில் 4 தங்கப் பதக்கங்களை வென்றனர். 61 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்தது.

பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வந்துன. இதில் நீச்சல், தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, வாலிபால், குத்துச்சண்டை, ஹாக்கி, மல்யுத்தம், ஸ்குவாஷ் உள்ளிட்ட 20 விளையாட்டுகளில் மொத்தம் 280 போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் 72 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் டி20 இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி கண்டு வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.

டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சரத் கமல் – ஜா அகுலா ஜோடி 11-4, 9-11, 11-5, 11-6 என்ற புள்ளிக் கணக்கில் மலேசியாவின் சூங் ஜாவன் – லைன் கரேன் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, கனடா வீராங்கனை மிச்செலி லியுடன் மோதினார். இதில் சிந்து 21-15, 21-13 என்ற புள்ளிகள் கணக்கில் கனடா வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்றார்.

காமன்வெல்த் போட்டியின் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து வெல்லும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும். இதற்கு முன்பு 2018-ல் கோல்ட் கோஸ்டில் நடந்த போட்டியில் கலப்பு அணி பிரிவில் தங்கமும், மகளிர் ஒற்றையரில் வெள்ளியும் அவர் வென்றிருந்தார். 2014-ல் கிளாஸ்கோவில் நடைபெற்ற போட்டியில் ஒற்றையர் பிரிவில் அவர் வெண்கலத்தை கைப்பற்றியிருந்தார். மேலும், இந்த காமன்வெல்த் போட்டியில் அவர் கலப்பு அணி பிரிவில் வெள்ளியையும் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் 2-1 செட் கணக்கில் மலேசிய வீரர் டிஸி யாங் நிக்கை வீழ்த்தி தங்கம் வென்றார். கலப்பு அணி பிரிவில் வெள்ளி வென்ற இந்திய அணியிலும் லக்சயா சென் இடம்பெற்றிருந்தார்.

ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி – சிராக் ஷெட்டி ஜோடி 21-15, 21-13 என்ற கணக்கில் இங்கிலாந்தின் பென் லான்-சீன் வென்டி ஜோடியை வென்று தங்கத்தை கைப்பற்றியது.

ஆடவர் ஒற்றையர் டேபிள் டென்னிஸில் வெண்கலத்துக்கான போட்டியில் இந்திய வீரர் ஜி.சத்யன் 11-9, 11-3, 11-5, 8-11, 9-11, 10-12, 11-9 என்ற கணக்கில் இங்கிலாந்தின் டிரிங்கலை வீழ்த்தி பதக்கத்தைக் கைப்பற்றினார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸில் தங்கப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய வீரர் அசந்தா சரத் கமலும், இங்கிலாந்தின் லியாம் பிட்ச்போர்டும் மோதினர். இதில் சரத் கமல் 11-13, 11-7, 11-2, 11-6, 11-8 என்ற கணக்கில் பிட்ச்போர்டை வீழ்த்தி தங்கம் வென்றார்.

ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்தியா 0-7 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. இதையடுத்து இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் மட்டுமே கிடைத்தது.

போட்டியின் கடைசி நாளான நேற்று மட்டும் 4 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலத்தை இந்தியா கைப்பற்றியது. இதன்மூலம் பதக்கப் பட்டியலில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களைப் பெற்று 4-வது இடத்தை பிடித்தது.

கடந்த 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியா வின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடை பெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என 66 பதக்கங்களுடன் 3-வது இடத்தைப் பிடித்திருந்தது. இந்நிலையில், தற்போதைய போட்டியில் ஒரு இடம் சரிந்து 4-வது இடத்துக்கு இந்தியா தள்ளப்பட்டது.

தமிழக வீரர் அசத்தல்

டேபிள் டென்னிஸ் விளையாட்டில் தமிழக வீரர் அசந்தா சரத் கமல் 3 தங்கம், ஒரு வெள்ளியை கைப்பற்றி சாதனை புரிந்தார். கலப்பு இரட்டையர், ஆடவர் ஒற்றையர், ஆடவர் அணிப் பிரிவு என 3 தங்கப் பதக்கத்தையும், ஆடவர் இரட்டையர் பிரிவில் அவர் தமிழக வீரர் சத்யனுடன் இணைந்து வெள்ளியையும் கைப்பற்றினார்.

நிறைவு விழா

போட்டி கடந்த மாதம் 28-ம் தொடங்கி நேற்று முடிவடைந்தது. நிறைவு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

நிறைவு விழாவில் இந்திய தேசியக் கொடியை டேபிள் டென்னிஸ் வீரர் அசந்தா சரத் கமல், குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் ஆகியோர் ஏந்திச் சென்றனர். நிறைவு விழாவின்போது கண்கவர் கலைநிகழ்ச்சிகள், சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.