CWG 2022 | இந்திய வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: “நாட்டுக்காகத் தங்களது முழு உழைப்பையும் அளித்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது பாராட்டுகள்.இனி வருபவை யாவும் இதைவிடச் சிறப்பானவையாக மட்டுமே இருக்கும். தங்களது எதிர்கால முயற்சிகளில் வெற்றிபெற எனது வாழ்த்துகள்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”பிர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்கக்காரனாகிவிட்ட சரத் கமல், சத்தியன் ஞானசேகரன், தீபிகா பல்லிகல், இந்தியாவின் பெருமை பி.வி.சிந்து, ஆற்றல்மிகு லக்ஷ்யா சென், ஆதிக்கமிகு நிக்கத் சரீன், இந்திய ஆடவர் ஹாக்கி அணியினர்,

மகளிர் கிரிக்கெட் அணியினர் உள்ளிட்ட, நாட்டுக்காகத் தங்களது முழு உழைப்பையும் அளித்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது பாராட்டுகள்.

இனி வருபவை யாவும் இதைவிடச் சிறப்பானவையாக மட்டுமே இருக்கும். தங்களது எதிர்கால முயற்சிகளில் வெற்றிபெற எனது வாழ்த்துகள்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, நடப்பு காமன்வெல்த் போட்டிகளுக்கான தொடர் இங்கிலாந்தின் பர்மிங்கம் நகரில் நிறைவு பெற்றுள்ளது. இதில் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் விளையாடிய இந்திய வீரர்களும், வீராங்கனைகளும் மொத்தமாக 61 பதக்கங்களை வென்றுள்ளனர்.

சுமார் 72 நாடுகளை சேர்ந்த 5054 விளையாட்டு வீரர்கள் 280 ஈவெண்ட்டுகளில் விளையாடி இருந்தனர். கடந்த ஜூலை 29 தொடங்கிய இந்த விளையாட்டு தொடர் ஆகஸ்ட் 8-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதில் இந்தியா சார்பில் 106 வீரர்கள் மற்றும் 104 வீராங்கனைகள் என மொத்தம் 210 பேர், 16 விதமான விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்று விளையாடி இருந்தனர்.

அதன் மூலம் இந்தியாவுக்கு 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்றுள்ளது. இது இந்திய அணியின் காமன்வெல்த் வரலாற்றில் ஐந்தாவது சிறந்த செயல்பாடாக உள்ளது. கடந்த 2010 டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த்தில் மொத்தம் 101 பதக்கங்களை வென்றிருந்தது இந்தியா. நடப்பு எடிஷனுக்கான காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது இந்தியா.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.