‘அட இவ்வளவு கவனக்குறைவா?'- ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியின் பரிதாபங்கள்

வேலூரில், ஸ்மார்ட்சிட்டி பணிகளின் ஒரு பகுதியாக, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியின்போது, அடிபம்ப்புடன் சேர்த்து கட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தோடு சேர்த்து போடப்பட்ட சாலை, ஜீப்போடு சேர்த்து போடப்பட்ட சாலை… இந்த வரிசையில் தற்போது இணைந்திருப்பது, அடிபம்புடன் சேர்த்து கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய். இத்தனையும் நடந்திருப்பது வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில்தான்.
ஸ்மார்ட் சிட்டி பணிகளின் ஒருபகுதியாக அனைத்து வார்டுகளிலும் கழிவுநீர் கால்வாய் மற்றும் பாதாள சாக்கடைப்பணிகள் நடைபெற்று வருகின்றன. சத்துவாச்சாரியை அடுத்த 19ஆவது வார்டு விஜயராகவபுரம் 2ஆவது தெருவில் கழிவு நீர் கால்வாய் தடுப்புச்சுவர் கட்டப்பட்டபோது அங்கு அடிபம்ப்புடன் இருந்த போர்வெல்லையும் சேர்த்து அப்படியே கட்டியிருக்கிறார்கள். மக்களுக்கு தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்த போர்வெல் அடிபம்ப்புக்கு ஏற்பட்ட நிலை காண்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
image
இது தொடர்பாக வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமாரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டதன் எதிரொலியாக, பொறியாளர் குழு அனுப்பப்பட்டு சீரமைப்புப்பணிகள் நடைபெற்றன. போர்வெல்லின் உயரத்தை பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் ஆய்வு செய்து உயரத்தை அதிகரிக்கும் பணிகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, அடிகுழாயுடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் அமைத்த ஒப்பந்த தாரர் குட்டி சரவணனின் ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார். நிலுவையில் உள்ள பிற பணிகளை செய்யவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.