வாஷிங்டன்: புளோரிடாவில் உள்ள தனது வீட்டில் எஃப்பிஐ அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் அத்துமீறல்கள் நடந்ததாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் தனது வீட்டில் இருந்த பாதுகாப்பு பெட்டியை அதிகாரிகள் உடைத்ததாகவும் ட்ரம்ப் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில், “புளோரிடாவில் உள்ள எனது மார்-எ-லாகோ இல்லம் திங்கட்கிழமை இரவு எஃப்பிஐ அதிகாரிகளால் சூழப்பட்டது. என் வீட்டில் இருந்த ஆவணங்களை எல்லாம் அவர்கள் சோதித்தார்கள். எனது பாதுகாப்பு பெட்டி உடைக்கப்பட்டது. ஆவணங்கள் தொடர்பாக அரசுடன் ஒத்துழைத்த பிறகு, எனது வீட்டில் முன்னறிவிப்பின்றி சோதனை நடத்தப்பட்டது தேவையில்லாத ஒன்று.எந்த முன்னாள் அதிபருக்கும் இதுபோல் நடந்ததது இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை அமெரிக்க நீதித்துறை தொடர்புடையது என்று கூறப்படுகிறது. ஆனால் அமெரிக்க நீதித்துறை ட்ரம்ப் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனை குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்த நிலையில் ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறும்போது தன்னுடன் சில ஆவணங்களைக் கொண்டு சென்றதாகவும் இந்த ஆவணங்கள் தொடர்பாகத்தான் இந்த சோதனை நடந்ததாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விசாரணையின் பின்னணியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளார், இது அரசியல் பழிவாங்கல் என்று விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால் வெள்ளை மாளிகையோ ட்ரம்ப் வீட்டில் நடந்த சோதனைக்கும் அமெரிக்க அதிபருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று விளக்கமளித்துள்ளது..